227 ரன்ஸ்.. 9 விக்கெட்.. நியூஸிலாந்துக்கு தொல்லை கொடுக்கும் இளம் தெ.ஆ அணி.. வெற்றியை அள்ளப்போவது யார்?

RSA vs NZ
- Advertisement -

நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் ரபாடா, மார்க்ரம் போன்ற முக்கிய வீரர்கள் எஸ்ஏ டி20 தொடரில் விளையாட சென்றதால் நெயில் பிராண்ட் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இரண்டாவது தர தென்னாபிரிக்க அணி விளையாடுகிறது.

அதனால் எதிர்பார்த்ததை போலவே முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த நியூசிலாந்து சொந்த மண்ணில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி ஹமில்டன் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் போராடி 242 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

சமமாக வெற்றி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ருவன் டீ ஸ்வார்ட் 64, டேவிட் பேடிங்கம் 39, வோன் பெர்க் 38 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்தரா 3, வில்லியம் ஓரௌர்க்கே 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்தை இந்த தொடரில் முதல் முறையாக அபாரமாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்கா 211 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி மடக்கிப் பிடித்தது.

நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 43, டாம் லாதம் 40, வில் எங் 36 ரன்கள் எடுக்க தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக டேன் பீட் 5, டேன் பேட்டர்சன் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 31 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்ஸில் கடுமையாக போராடியும் 235 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு 8 வீரர்கள் 20 ரன்கள் கூட தாண்டாத நிலையில் அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் சதமடித்து 110 ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார்.

- Advertisement -

அவருடன் கேப்டன் நெயில் பிராண்ட் 34, கீகன் பீட்டர்ஸன் 43 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக வில்லியம் ஓரௌர்க்கே 5, கிளன் பிலிப்ஸ் 2 விக்கெட்களை எடுத்தனர். இறுதியில் 267 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து 40 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனால் 3வது நாளில் கடைசி ஓவரில் டேவோன் கான்வே 17 ரன்களில் பீடி சுழலில் அவுட்டானார். அதனால் மூன்றாவது நாள் முடிவில் 40/1 ரன்கள் எடுத்துள்ள நியூசிலாந்துக்கு களத்தில் டாம் லாதம் 21* ரன்களுடன் உள்ளார்.

இதையும் படிங்க: வற்புறுத்தல ஆனா அதை செய்யலன்னா.. சான்ஸ் கிடைக்காது.. இஷான், பாண்டியா போன்றவர்களை எச்சரித்த ஜெய் ஷா

தற்போதைய நிலைமையில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 227 ரன்களும் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகளும் தேவைப்படுகிறது. எனவே 2 அணிகளுக்கும் வெற்றி சமமாக இருப்பதால் அதை அள்ளப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து பாடத்தை கற்ற இளம் தென்னாப்பிரிக்க அணி இப்போட்டியில் நியூசிலாந்துக்கு பெரிய தொல்லையை கொடுத்து வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது.

Advertisement