விராட் கோலி 100வது டெஸ்ட் : சாதாரண வீரர் முதல் எதிரணிகளை தெறிக்கவிடும் சாதனையாளர் வரை – ஒரு வரலாற்று அலசல்

Kohli-1
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்குபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் பெங்களூருவில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது.இந்த தொடரில் பங்கேற்பதற்காக புதிய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே மொஹாலி நகரை சென்றடைந்து அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Kohli

- Advertisement -

விராட் கோலியின் 100வது டெஸ்ட்:
முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் ஓய்வெடுத்த நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி இலங்கைக்கு எதிராக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். குறிப்பாக மொகாலியில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இதற்காக ஏற்கனவே அவர் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த மைல்கள் போட்டியில் அவரை கவுரவிக்க பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் சில முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த வேளையில் ஒரு சாதாரண வீரராக விளையாட துவங்கி இன்று ஒரு சாதனையாளராக மாறியுள்ள விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை பற்றி பார்ப்போம்.

kohli

1. சாதாரண வீரர்: கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் காலடி வைத்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட போதிலும் டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். அவ்வேளையில் கடந்த 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் மூத்த ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ஒருவழியாக டெஸ்ட் அணியில் முதல் முறையாக விராட் கோலி இடம் பிடித்தார்.

- Advertisement -

அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஜமைக்கா நகரில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி வைத்த அவர் அந்த தொடரின் 3 போட்டிகளில் வெறும் 76 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார். அதன் காரணமாக அந்த வருடம் இங்கிலாந்து சென்ற இந்திய டெஸ்ட் அணியில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

kohli century

2. முதல் சதம் – அரைசதம்: அப்படி சாதாரண வீரராக இருந்த அவர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு பின் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் மீண்டும் வாய்ப்பு பெற்றார். அதை இறுக்கமாக பிடிக்க துவங்கிய அவர் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து முதல் முறையாக அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியை ஈர்த்தார்.

- Advertisement -

அதன் காரணமாக அதன்பின் சவால் மிகுந்த ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் வாய்ப்பு பெற்ற அவர் முதல் 2 போட்டியில் மோசமாக விளையாடிய காரணத்தால் அவரை நீக்க வேண்டும் என பலரும் கூறினார்கள். ஆனால் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் வாய்ப்பு கொடுக்க 3வது போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 44 மற்றும் 75 ரன்கள் எடுத்து கேப்டனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டார். அதன்பின் அடிலெய்ட் நகரில் நடந்த கடைசி போட்டியில் அபாரமாக செயல்பட்ட அவர் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் சதமடித்து 116 ரன்கள் குவித்தார்.

Kohli-1

3. மறக்கமுடியாத இங்கிலாந்து சுற்றுப்பயணம்: அதன்பின் சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து இந்திய அணியில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்தார். குறிப்பாக அந்த தொடரில் பெங்களூருவில் நடந்த ஒரு போட்டியில் சதமடித்த அவர் இந்திய அணியில் முக்கிய வீரராக மாறினார்.

- Advertisement -

அதனால் கடந்த 2014ஆம் ஆண்டு நிகழ்ந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவரின் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. ஏனெனில் அந்த தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற பந்துவீச்சாளர்களிடம் தொடர்ந்து அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்தில் அவுட்டான அவர் 10 இன்னிங்சில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து படு மோசமாக செயல்பட்டார்.

Kohli

4. கேப்டன் பொறுப்பு: அந்த சமயத்தில் 2014ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் முதல் போட்டியில் கேப்டன் தோனி காயத்தால் விலகியதையடுத்து தற்காலிகமாக கேப்டன்ஷிப் செய்த விராட் கோலி அந்தப் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்றார்.

அதை உன்னிப்பாக கவனித்து வந்த கேப்டன் தோனி ஏற்கனவே தனது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி பல தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்து வந்ததால் இனிமேல் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த விராட் கோலி சரியானவர் என முடிவெடுத்து சிட்னியில் நடந்த 2வது போட்டியின் முடிவில் திடீரென ஓய்வு பெற்றார். அப்போது முதல் முறையாக முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அந்தத் தொடரை இந்தியா இழந்த போதிலும் 692 ரன்களை குவித்து ஒரு நல்ல கேப்டனாக காட்சி அளித்தார்.

Kohli-3

5. மிரட்டல் 2018: அதை தொடர்ந்து கேப்டனாக பொறுப்பேற்ற போது 7வது இடத்தில் தவித்துக் கொண்டிருந்த இந்தியாவை தனது அதிரடியான ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016ஆம் ஆண்டு உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விராட் கோலி தரம் உயர்த்தினார். அதன்பின் அவர் தலைமையில் சொந்த மண்ணில் நடந்த அனைத்து தொடர்களிலும் வெற்றி நடைபோட்ட இந்தியா கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

அந்த தொடரில் இதர இந்திய வீரர்கள் சொதப்பிய போதிலும் கேப்டன் விராட் கோலி மட்டும் அனைத்து போட்டிகளிலும் தனி ஒருவனாக நின்று மொத்தம் 593 ரன்கள் குவித்தார். அந்தத் தொடரை இந்தியா இழந்த போதிலும் 2014ஆம் ஆண்டு அதே இங்கிலாந்தில் அதே ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக தடுமாறிய அவர் இம்முறை அவரிடம் ஒருமுறை கூட அவுட்டாகாமல் தன்னை உலகத்தரம் வாய்ந்த ஒரு பேட்ஸ்மேன் என நிரூபித்தார்.

Kohli

6. மாஸ் கேப்டன்: அதை தொடர்ந்து சொந்த மண்ணில் மட்டும் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை வெளிநாடுகளிலும் வெற்றிபெற வைக்கும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டார். வெளிநாடுகளில் வெற்றி பெற வேண்டுமானால் எதிரணியின் 20 விக்கெட்டுக்களை எடுக்க வழக்கமான சுழல் பந்துவீச்சை நம்பாமல் வேகப்பந்துவீச்சால் தான் முடியும் என உணர்ந்த அவர் மற்ற இந்திய கேப்டன்களைவிட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகப்படியான ஆதரவை அளித்தார். அதன் பயனாக அவர் தலைமையில் வெளிநாடுகளில் வெற்றி பெறத் துவங்கிய இந்தியா 70 வருடங்களில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கடந்த 2019இல் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

அந்த வேளையில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை லீக் சுற்றில் அவர் தலைமையிலான இந்தியா மிரட்டிய போதிலும் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோற்றது. ஆனால் அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா தற்போது முன்னிலையில் உள்ளது.

Kohli

90களில் ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா எப்படி உலகின் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறும் அணியாக உலகை மிரட்டியதோ அதேபோல் அவர் தலைமையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா பல சரித்திர வெற்றிகளைப் பெற்றது. அந்த வேளையில் கடந்த மாதம் திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி 68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையுடன் விடை பெற்றுள்ளார்.

அவர் பொறுப்பேற்றபோது சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறும் அணியாக இருந்த இந்தியா தற்போது உலகின் எந்த ஒரு இடத்திலும் எவ்வளவு மோசமான தருணத்தில் சிக்கினாலும் கூட அதிலிருந்து மீண்டெழுந்து போராடி வெற்றி பெறக்கூடிய குணத்தை கொண்ட அணியாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : ரஹானே மற்றும் புஜாராவிற்கு பதிலாக டெஸ்ட் தொடரில் விளையாடப்போகும் அந்த 2 இளம்வீரர்கள் – யார் தெரியுமா?

மொத்தத்தில் 2011இல் ஒரு சாதாரண வீரராக விளையாட துவங்கிய விராட்கோலி அதன்பின் எதிரணிகளை தெறிக்கவிடும் ஒரு பேட்ஸ்மேனாக உருவெடுத்து பின்னர் அதிரடி கேப்டனாக பொறுப்பேற்று பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து 100 போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பே ஒரு ஜாம்பவானாக தன்னை நிரூபித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய பங்கிற்காக 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு ரசிகர்களின் சார்பாக வாழ்த்துக்கள்.

Advertisement