குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? : கலக்கல் அறிமுகம்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 47 ரன்களையும் குவித்தனர்.
அதன்பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக துவக்க வீரராக அறிமுகமான 24 வயதான பிரியான்ஷ் ஆர்யா 23 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 47 ரன்கள் குவித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி அறிமுகப் போட்டியிலேயே 204 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அசத்திய வீரரான இவர் யார்? என்ற தேடலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
24 வயதான பிரியான்ஷ் ஆர்யா டெல்லியை சேர்ந்த வீரர். இளம் வயதிலிருந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவருக்கு 2024 டெல்லி பிரீமியர் லீக் மிகப்பெரிய திருப்பத்தை தந்தது. ஏனெனில் இந்த தொடரின் போது 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த அவர் 10 போட்டிகளில் விளையாடி 198 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 608 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அந்த தொடரில் இரண்டு சதத்தையும் விளாசியிருந்தார்.
இதையும் படிங்க : அஹ்மதாபாத்தில் அசத்திய 2 தமிழக வீரர்கள்.. ராகுலை முந்தி சுதர்சன் 2 சாதனை.. ரசித் கானை மிஞ்சிய கிசோர்
அதுமட்டும் இன்றி சையத் முஷ்டாக் அலி தொடரின் போது 176 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 325 ரன்கள் குவித்து டெல்லி அணி சார்பாக அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தார். இப்படி தொடர்ச்சியாக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவரை கவனத்தில் கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி 30 லட்சம் அடிப்படை விலையாக கொண்ட அவரை 3 கோடியே 80 லட்சம் வரை சென்று ஏலத்தில் எடுத்தது.



