அந்த வியப்பான முடிவே ஐபிஎல் 2021 வெற்றிக்கு காரணம் – தோனியின் கேப்டன்ஷிப் பற்றி இந்திய வீரர் வியப்பு

Dhoni-3 IPL
- Advertisement -

அரபு நாடுகளில் வரலாற்றில் 15ஆவது முறையாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் இளம் வீரர்களை வைத்து மிரட்டிய இலங்கை பாகிஸ்தானை தோற்கடித்து 6வது கோப்பையை வென்று அசத்தியது. அதிலும் டாஸ் தோற்றால் அத்தோடு கதையும் முடிந்தது என்ற நிலையைக் கொண்ட துபாய் மைதானத்தில் டாஸ் தோற்றும் 68/5 என சுருண்டும் தங்களது அணி கொதித்தெழுந்து வெற்றி பெறுவதற்கு 2021இல் அதே மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை 4வது கோப்பையை வென்றது உத்வேகத்தை கொடுத்ததாக இலங்கை கேப்டன் தசுன் ஷனகா வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஏனெனில் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 2வது பாகத்தில் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் டாஸ் வென்று சேசிங் செய்த அணிகள் வென்றன.

KKRvsCSK

- Advertisement -

அந்த நிலையில் நடைபெற்ற மாபெரும் பைனலில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்து சென்னை நிர்ணயித்த 193 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு கில் 51, வெங்கடேஷ் ஐயர் 50 என தொடக்க வீரர்கள் அதிரடியான ரன்களைக் குவித்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான தொடக்கம் கொடுத்தனர். அதனால் தோல்வி உறுதியென்று நினைத்த போது தோனியின் அற்புதமான கேப்டன்ஷிப் உதவியுடன் அதிரடியாக பந்து வீசிய சென்னை பவுலர்கள் கொல்கத்தாவை 165/9 ரன்களுக்கு சுருட்டி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

சூப்பரான கேப்டன்ஷிப்:
அதனால் தோனியின் மிகச்சிறந்த கேப்டன்ஷிப்புக்கு எடுத்துக்காட்டாக திகழும் பல தருணங்களில் அதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த பைனலில் மிரட்டிய கொல்கத்தாவின் ஓப்பனிங் ஜோடியை பிரித்து முதல் விக்கெட்டை தாம் எடுப்பதற்கு தோனியின் ஆலோசனை உதவியதாக அப்போட்டியில் விளையாடிய ஷர்துல் தாகூர் கூறியுள்ளார். கடந்த 2018 முதல் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு முன்னேறிய அவர் இந்த வருடம் டெல்லி அணிக்காக விளையாடினார். இருப்பினும் பழசை மறக்காமல் தோனியின் கேப்டன்ஷிப் பற்றி ருதுராஜ் கைக்வாட் உடன் இணைந்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Thakur-1

“அந்த சமயத்தில் மஹி பாய் என்ன நினைத்தார் என்பது எனக்கு தெரியாது. அவர் ப்ராவோவை லாங் ஆஃப் திசைக்கு செல்லுமாறு கையால் சைகை கொடுத்தார். அத்துடன் நீங்கள் எப்படி பந்துவீச விரும்புகிறீர்கள் என்று அவர் என்னிடம் கேட்டார். அதற்கு நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் எப்படி சொன்னாலும் அதற்கேற்றார் போல் பந்து வீச தயாராக இருக்கிறேன் என்று நான் பதிலளித்தேன். அப்போது அவர் மிட் ஆஃப் பீல்டரை உள் வட்டத்திற்குள் வைத்துக் கொண்டு பந்து வீசுமாறு சொன்னார். ஆச்சரியப்படும் வகையில் அடுத்த பந்திலேயே வெங்கடேஷ் ஐயர் அவுட்டானதும் நித்திஸ் ராணாவும் அவுட்டானதால் போட்டியின் சென்னை பக்கம் திரும்பியது”

- Advertisement -

“அந்த சமயத்தில் நான் சிறப்பாக பந்து வீசினேன் தான். ஆனால் அவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் அந்த முக்கிய விக்கெட்டை வெற்றிகரமாக எடுக்கும் அளவுக்கு யோசித்து எனக்கு ஆலோசனை கொடுத்தது அந்த பெரிய மனிதரின் மகத்துவத்தை காட்டுகிறது” என்று கூறினார். முன்னதாக கடந்த 2019 ஐபிஎல் பைனலில் மும்பைக்கு எதிராக கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது அதை எடுக்க முடியாமல் மலிங்காவிடம் அவுட்டான ஷர்துல் தாகூர் 2021 பைனலில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

csk 1 IPL

“2018இல் முதல் முறையாக கோப்பையை வென்ற அனுபவம் எனக்குள்ளது. ஆனால் 2021 மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் 2019இல் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது நெஞ்சை உடைத்தது. இருப்பினும் 2021இல் ஆரம்பத்திலேயே தொடர்ச்சியான 3 போட்டிகளை தோற்று அதிலிருந்து மீண்டெழுந்து பைனல் வரை சென்று கோப்பையை வென்றது அபாரமானதாகும். அதே சமயம் 2019 தோல்வி என்னை உணர்வுபூர்வமாக தாக்கியது”.

இதையும் படிங்க : நான் எதுக்கும் சளைச்சவன் இல்ல. விராட் கோலியின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்த – பாபர் அசாம் அசத்தல்

“ஏனெனில் நான் தான் அந்த கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாமல் அவுட்டானேன். அதனால் மிகவும் மனமுடைந்த நான் ஒரு பாரத்தை தலையில் வைத்துக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன். ஆனால் 2021 பைனலில் 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு பங்காற்றிய போது அந்த பாரம் என்னை விட்டு சென்றதாக உணர்ந்தேன். அத்துடன் அந்த வெற்றியால் வானத்தில் மிதப்பதை போன்று உணர்ந்தேன்” என்று கூறினார்.

Advertisement