
வங்கதேச சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதற்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில் முதலில் நடைபெறும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களைக் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா வழக்கம் போல கேப்டனாகவும் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட இதர சீனியர்களும் திரும்பியுள்ளனர்.
ஆனால் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ஷிகர் தவானுக்கு அதில் வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமில்லை என்றாலும் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் வருத்தத்தை கொடுத்துள்ளது. டெல்லியை சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் திண்டாடிய அவரது திறமையை கவனித்து வந்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபியில் அவரைப் போலவே தடுமாறிய மற்றொரு திறமையான ரோஹித் சர்மாவையும் இணைத்து புதிய ஓப்பனிங் ஜோடியை உருவாக்கிய களமிறக்கி விட்டார்.
தேங்க் யூ ஐசிசி:
அதில் வெற்றிகரமாக செயல்பட்ட அந்த ஜோடியில் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்ற சிகர் தவான் இந்தியா 2013 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முக்கிய பங்காற்றினார். அப்போது முதல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிரந்தர ஓப்பனிங் ஜோடியாக அவதரித்த அவர்கள் கடந்த 2019 வரை நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்கள். இதுவரை 117 இன்னிங்சில் 5193 ரன்களை குவித்துள்ள அந்த ஜோடி 18 முறையில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் கங்குலி – சச்சின் ஆகியோருக்குப் பின் சிறந்த இந்திய ஜோடியாக சாதனை படைத்துள்ளது.
அதில் இருதரப்பு தொடர்களை விட அழுத்தமான ஐசிசி தொடர்களில் அசத்திய சிகர் தவான் 2015 உலகக் கோப்பையில் 412 ரன்கள் குவித்து 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் மீண்டும் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்றும் இதர வீரர்களின் சொதப்பலால் இந்தியா தோற்றது. அத்துடன் 2018 ஆசிய கோப்பையின் தொடர் நாயகன், இலங்கையில் நடைபெற்ற நிதகாஸ் முத்தரப்பு தொடர் நாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தவானை மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
ஆனால் 2019 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து வெற்றி பெற வைத்து வெளியேறிய அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ராகுல் அவரை விட சற்று சிறப்பாக செயல்பட்டு இளம் வீரராக இருப்பதால் அந்த இடத்தை தனதாக்கி விட்டார். மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்த சிகர் தவான் ஐபிஎல் தொடரில் 400, 500 போன்ற பெரிய ரன்களை குவித்தாலும் முன்பு போல் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவிக்க தடுமாறினார். அதனால் காலம் கடந்த அவரை பிசிசிஐ இதுவரை ஆற்றிய பங்கிற்காக ஜிம்பாப்வே போன்ற 2வது தர அணிகளுக்கு எதிரான தொடரில் கேப்டனாக வாய்ப்பளித்து அடுத்த தொடரிலேயே கழற்றி விட்டு வந்தது.
ஆனால் அதிலும் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் வங்கதேச ஒருநாள் தொடரில் சொதப்பிய அவர் 2021க்குப்பின் சதமடிக்காமல் 985 ரன்களை 39.40 என்ற சுமாரான சராசரியில் எடுத்தார். அதனால் காலம் கடந்து சுமாராக செயல்படும் அவரை பார்ப்பது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் இஷான் கிசான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறும் வங்கதேச தொடரின் போதே நிறைய ரசிகர்கள் விமர்சித்தனர்.
இதையும் படிங்க: அப்டினா கழற்றி விட்டாங்களா – 2 இலங்கை தொடர்களிலும் ரிஷப் பண்ட் இடம் பெறாதது ஏன்? உண்மையான தகவல் இதோ
அந்த நிலையில் இலங்கைத் தொடரில் கழற்றி விடப்பட்ட ஷிகர் தவான் ஏற்கனவே 37 வயதை கடந்து விட்டவர் என்பதால் இனிமேல் இந்திய அணியில் பார்க்க முடியாது என்றே சொல்லலாம். அதனால் அவருடைய கேரியர் முடிந்ததாக கருதும் ரசிகர்கள் காலம் கடந்தாலும் நீங்கள் எப்போதும் மிஸ்டர் ஐசிசி என்று சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்து பிரியா விடை கொடுத்து பாராட்டி வருகிறார்கள்.