வங்கதேச சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதற்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில் முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதில் ஏற்கனவே 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய இளம் அணியை உருவாக்கும் வேலையை துவங்கியுள்ள பிசிசிஐ மீண்டும் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை தேர்வு செய்துள்ளது.
அதை தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பும் நிலையில் விராட் கோலி, ராகுல் உள்ளிட்ட சீனியர்களுடன் முகமது ஷமி, சுப்மன் கில் ஆகியோரும் திரும்பியுள்ளனர். இந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படும் நிலையில் சூரியகுமார் யாதவ், இசான் கிசான், வாஷிங்டன் சுந்தர் போன்ற சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய வீரர்கள் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். ஆனால் இலங்கைக்கு எதிராக அறிவிக்கப்பட்ட அந்த 2 அணிகளிலும் ரிஷப் பண்ட் இடம் பெறாதது நிறைய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் வியப்பாகவும் அதே சமயம் குழப்பமாகவும் அமைந்துள்ளது.
உண்மை என்ன:
முன்னதாக 2017ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த ஆசிய விக்கெட் கீப்பராக தோனியால் முடியாத சாதனைகளை படைத்து காபா போன்ற சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்தியாவின் முதன்மை விக்கெட் கீப்பராக உருவெடுத்தார். ஆனால் அதிரடியாக விளையாட வேண்டிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் 30 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் எப்போதுமே ரசிகர்களின் மனதில் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதில்லை.
ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் கடந்த ஜூலை அடித்த முதல் சதத்தை தவிர்த்து சுமாராக செயல்பட்ட அவர் டி20 கிரிக்கெட்டில் 66 போட்டிகளிலும் சுமாராகவே செயல்பட்டுள்ளார். இருப்பினும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் கிரிக்கெட்டில் திறமையை நிரூபித்துள்ளார் என்பதற்காக அவரை வருங்கால கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் உருவாக்க நினைத்து உள்ளங்கையில் தாங்கிய பிசிசிஐ ஓப்பனிங் முதல் 7 வரை அனைத்து பேட்டிங் இடத்திலும் வாய்ப்பு கொடுத்தது. ஆனால் ராஜா வீட்டுப் பிள்ளையை போல அந்த அனைத்து வாய்ப்புகளையும் வீணடித்த அவர் ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களின் அதிருப்தியையும் வாங்கி கட்டிக்கொண்டார் .
மேலும் சொதப்பலாக செயல்படும் அவருக்கு பதிலாக காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் எந்த வாய்ப்பையும் பெறாத ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம் கடந்த மாதம் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது சந்தித்த காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாத அவரை பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஜனவரி 3 முதல் 15 வரை முகாமிட்டு 100% குணமடைந்து வருமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதை பார்க்கும் ரசிகர்கள் இதெல்லாம் நம்பற மாதிரியாக இருக்கு? என்று வெளிப்படையாக பேசுகிறார்கள். ஏனெனில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பின் வங்கதேச ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெறாத ரிசப் பண்ட் டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடினார். அதில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் விளையாடிய அவர் முதல் போட்டியில் 46 ரன்களும் 2வது போட்டியில் 93 ரன்களும் எடுத்தார். ஒருவேளை காயம மடைந்திருந்தால் அவர் எப்படி விளையாடி இருக்க முடியும்.
இதையும் படிங்க: முந்தைய சீசனில் வாங்கியதை விட 2023 சீசனில் 200% மேல் அதிக சம்பளம் வாங்கும் 4 வீரர்கள் – லிஸ்ட் இதோ
இதிலிருந்தே அவர் காயமடைவில்லை என்பதும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாததால் நீக்கப்பட்டுள்ளார் என்பதும் தெளிவாக தெரிய வருகிறது. இதனால் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை போலவே சிறந்த டெஸ்ட் வீரரான ரிசப் பண்ட் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டுள்ளார் என்பதே நிதர்சனமாகும். இருப்பினும் அவரை அடுத்த தலைமுறை கேப்டனாக உருவாக்க நினைக்கும் பிசிசிஐ அந்த செய்தியை வெளியே விடாமல் மறைத்து வைப்பது அப்பட்டமாக தெரிவது குறிப்பிடத்தக்கது.



