அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் ஜூலை 6ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு 28வது போட்டி நடைபெற்றது. அதில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சீட்டல் ஆர்காஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற சீட்டல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெக்ஸாஸ் அணிக்கு ஸ்மித் பட்டேல் 18 (20) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் டு பிளேஸிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். எதிர்ப்புறம் வந்த சைதேஜா முக்கமலா 1 (3) ரன்னில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த சுபம் ரஞ்சனே தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார்.
என்னா மனுஷன்யா:
மறுபுறம் தொடர்ந்து அசத்திய டு பிளேஸிஸ் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். நேரம் செல்ல செல்ல வேகமாக விளையாடிய அவர் 3வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை நெருங்கினார். ஆனால் அப்போது தம்மை விட கடந்த போட்டியில் 9 பந்தில் 37 ரன்கள் அடித்த டோனவன் ஃபெரிரா அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்வார் என்று டு பிளேஸிஸ் கருதினார்.
அதனால் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 91* ரன்கள் எடுத்திருந்த அவர் சதத்தை பொருட்படுத்தாமல் ரிட்டையர்ட் அவுட்டாகி சென்றார். அப்படி தனது அணிக்காக 9 ரன்னில் சதத்தை தியாகம் செய்த அவரை “என்னா மனுஷன்யா” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டினர். ஆனால் அடுத்து வந்த ஃபெரிரா 3 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்.
முதலிடத்தில் டெக்சாஸ்:
இறுதியில் சுபம் ரஞ்சனே அரை சதத்தை அடித்து 65* (41) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் டெக்சாஸ் 188/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சீட்டல் அணியை அபாரமாக பவுலிங் செய்த டெக்ஸாஸ் 18.4 ஓவரில் 137 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் 9, ஆரோன் ஜோன்ஸ் 14, சிம்ரோன் ஹெட்மேயர் 26, ஹென்றிச் க்ளாஸென் 23, கேப்டன் சிக்கந்தர் ராசா 23 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கவில்லை.
இதையும் படிங்க: பஸ்பால் இங்கிலாந்துக்கு பயந்து இந்தியா லேட்டாக டிக்ளேர் செய்ததா? ஹாரி ப்ரூக் சாவல் பற்றி மோர்கெல் பதில்
அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 35 (28) ரன்கள் எடுத்த நிலையில் டெக்ஸாஸ் அணிக்கு அதிகபட்சமாக ஆடம் மில்னே 3.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். அவருடன் நூர் அகமது, ஆக்கில் ஹொசைன் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதனால் 57 ரன்கள் வித்யாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற டெக்ஸாஸ் மொத்தம் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி குவாலிபயர் 1போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. இந்த வெற்றிக்கு சதத்தை விட்டாலும் முக்கிய பங்காற்றிய டு பிளேஸிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்