
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக 2வது போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியைச் சந்தித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனையையும் படைத்தது.
ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்தியா சொந்த மண்ணில் வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்தது. அந்த சோகம் தீர்வதற்குள் இந்திய அணி மற்றுமொரு படுதோல்வியைச் சந்தித்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் துவங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறும் இந்தியா ஒருநாள் போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. அத்துடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் அணிக்குத் திரும்பியுள்ளார்கள். எனவே அவர்களுடைய அனுபவத்தை வைத்து இந்திய அணி ஒருநாள் தொடரில் வென்று தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில் விராட், ரோஹித் போன்ற தரமான வீரர்கள் வருவது டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்வியால் துவண்டு கிடக்கும் இந்திய அணிக்கு புதிய எனர்ஜியைக் கொடுக்கும் தென்னாப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ஆனால் டெஸ்ட் தொடரை போல ஒருநாள் தொடரிலும் இந்தியாவை தோற்கடிக்க வேண்டுமென்ற தங்களுடைய குறி மாறாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் விராட், ரோஹித்தை சமாளிப்பதற்கு தேவையானத் திட்டங்களை வைத்திருப்பதாகவும் பவுமா தெரிவித்துள்ளார்.
இது பற்றி பவுமா பேசியது பின்வருமாறு. “2 வாழும் ஜாம்பவான்கள் நீண்ட காலம் கழித்து மீண்டும் இந்திய மண்ணில் விளையாடுவது உள்ளூரில் இருக்கும் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் இருவரும் இந்திய அணியை சுற்றியிருக்கும் போது வித்தியாசமான எனர்ஜி இருக்கும். எனவே நாங்களும் அதை எதிர்நோக்குவதற்காக உள்ளோம்”
இதையும் படிங்க: உழைச்சு வந்ததும் இந்திய வீரர்கள் அந்த பக்கம் போறதே இல்லை.. அதான் இந்தியா தோற்குது.. மஞ்ரேக்கர்
“மற்ற வீரர்களைப் போலவே அவர்களுக்கு எதிராகவும் நாங்கள் எங்களுடைய தயாராகும் முறைகளை செய்து தேவையான தந்திரங்களுடன் வருவோம். அவர்களுடைய வருகையால் இந்திய அணியின் எனர்ஜி வித்தியாசமாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும் ஆனால் அது சுவாரசியமாக இருக்கும். கேப்டன்ஷிப் பொறுத்த வரையில் என்னிடம் எந்த மாற்றமும் கிடையாது. நீங்கள் பேட்டிங்கில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். பின்னர் எங்களுடைய வீரர்களை களத்தில் தந்திரங்கள் அடிப்படையில் வழி நடத்த வேண்டும்” என்று கூறினார்.