
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் தொடரின் கடைசிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கியது. லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இந்திய அணியில் எதிர்பார்த்ததைப் போலவே ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ஏற்கனவே தடுமாற்றமாக பவுலிங் செய்ததால் கழற்றி விடப்பட்ட பிரசித் கிருஷ்ணா விளையாடுவதாக கேப்டன் கில் அறிவித்தார். அதே போல கடந்த போட்டியில் அறிமுகமான கம்போஜ் தடுமாற்றமாக பவுலிங் செய்தார்.
எனவே அவருக்கு பதிலாக கடந்தப் போட்டியில் காயத்தால் வெளியேறிய ஆகாஷ் தீப் விளையாடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 8 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்தும் தடுமாற்றமாக செயல்பட்ட கருண் நாயர் கடந்தப் போட்டியில் நீக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் இருந்தன. அதனால் சர்துள் தாக்கூரை நீக்கியுள்ள இந்திய அணி அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது.
இது போக காயத்தால் வெளியேறிய ரிஷப் பண்ட்க்கு பதிலாக துருவ் ஜுரேல் எதிர்பார்த்ததைப் போல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குல்தீப் யாதவ் மீண்டும் விளையாடாதது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதற்கிடையே இந்தத் தொடரின் 5 போட்டிகளிலும் டாஸ் வீசுவதில் இந்திய கேப்டன் கில் வெற்றி காணாமல் ஏமாற்றத்தையே சந்தித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நாங்கள் வெற்றிகளைக் காணும் வரை டாஸ் வீசுவதில் சந்திக்கும் தோல்விகளைப் பற்றி கவலைப்பட போவதில்லை. சொல்லப்போனால் நேற்று என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் எனக்கு இருந்தது. மைதானத்தில் கொஞ்சம் மழையுடன் கூடிய வானிலை நிலவுகிறது. இருப்பினும் பிட்ச் நன்றாகவே இருக்கிறது. நாங்கள் முதல் இன்னிங்சில் நல்ல ஸ்கோர் அடிப்பதற்கு பார்ப்போம்”
இதையும் படிங்க: பும்ரா இல்லனாலும் இந்தியாவுக்காக.. அவர் 5வது டெஸ்டில் 5 விக்கெட்ஸ் எடுத்து அசத்துவாரு.. டேல் ஸ்டைன் கணிப்பு
“இது பவுலர்களுக்கு நல்ல பிட்ச்சாக இருக்கும் என்று இரு நம்புகிறேன். எங்களுடைய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்படுகிறது. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதற்காகப் பார்க்கிறோம். தோல்வியை சந்தித்த போட்டிகளிலும் நாங்கள் வெற்றியை நெருக்கமாக நெருங்கி வந்தோம். எனவே வெற்றியைப் பிடிப்பதற்கு 5 – 10% எக்ஸ்ட்ரா நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். எங்களுடைய வீரர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்து வருகிறார்கள்” என்று கூறினார்.