
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அத்தொடரில் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது. அப்போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துபாயில் துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. கடைசியாக விளையாடிய 15 சர்வதேச போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இதே துபாயில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் நடைபெற்ற 5 போட்டிகளிலும் டாஸ் வீசுவதில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது.
இருப்பினும் அத்தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் ரோகித் தலைமையில் கோப்பையை வென்றது வேறு கதை. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகளிலும் டாஸ் வீசுவதில் தோல்வியை மட்டுமே சந்தித்தது. மொத்தத்தில் கடைசியாக 2025 ஜனவரி மாதம் 28ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் போது இந்தியாவின் கேப்டன் சூரியகுமார் யாதவ் டாஸ் வென்றார்.
அதன் பின் விளையாடிய 15 போட்டிகளில் தொடர்ந்து டாஸ் வீசுவதில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் (15) டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்த அணி என்ற பரிதாபமான மோசமான சாதனையை இந்தியா படைத்தது. அந்த மோசமான உலக சாதனை ஒரு வழியாக இன்றைய போட்டியில் மீண்டும் சூரியகுமார் டாஸ் வென்றதால் முடிவுக்கு வந்தது.
மேலும் இப்போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்று கேப்டன் சூரியகுமார் அறிவித்தார். அதே போல ஜஸ்ப்ரித் பும்ராவை மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக விளையாட வைக்க இந்தியா முடிவெடுத்தது. சிவம் துபே, ஹர்டிக் பாண்டியா ஆகிய ஆல் ரவுண்டர்கள் பவுலிங் செய்வார்கள் என்பதால் அர்ஷ்தீப் சிங் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சஞ்சு சாம்சனுக்கு இடம்.. கில் ஓப்பனர்.. யு.ஏ.இ அணிக்கெதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ
2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். இதுவரை தம்முடைய டி20 கேரியரில் 99* விக்கெட்டுகள் எடுத்துள்ள அர்ஷ்தீப் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறாததால் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை தற்காலிகமாக தவற விட்டுள்ளார். இருப்பினும் அடுத்து வரும் போட்டிகளில் அவர் அந்த சாதனையை படைப்பதற்கு பிரகாச வாய்ப்புள்ளது.