
இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டை எடுத்து சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்று உலக சாதனையும் படைத்துள்ள அவருக்கு இந்திய அணி வெளிநாடுகளில் தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் இருந்தது.
அதன் காரணமாக வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த நிலையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் கடைசி 2 போட்டிகளில் அஸ்வின் இடத்தில் டானுஷ் கோட்டியான் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த அவர் அஸ்வின் போலவே ஆஃப் ஸ்பின்னர் மற்றும் வலது கை பேட்ஸ்மேனாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
2018 முதல் மும்பை அணிக்காக விளையாடும் அவர் 33 போட்டிகளில் 1525 ரன்களை 41.21 என்ற நல்ல சராசரியில் அடித்துள்ளார். அதில் 2 சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் அடங்கும். அதே போல பந்து வீச்சில் 101 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக கடந்த ரஞ்சிக்கோப்பையில் 29 விக்கெட்டுகள் எடுத்த அவர் 502 ரன்கள் குவித்து மும்பை சேம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
அந்த வகையில் 26 வயதாகும் அவர் கிட்டத்தட்ட அஸ்வின் போலவே சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக உள்ளூரில் அசத்தி வருகிறார். அதன் காரணமாகவே தற்போது அவருடைய இடத்தில் டானுஷ் கோட்டியான் இந்திய அணியில் தேர்வாகியுள்ளார். ஆனால் உடனடியாக அவருக்கு அஸ்வின் இடத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்றே சொல்லலாம்.
இருப்பினும் வருங்காலங்களில் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதனால் மும்பையைச் சேர்ந்த அவர் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு போட்டியாகவும் வந்துள்ளார் என்றே சொல்லலாம். ஆனால் வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே அஸ்வின் இடத்தை நிரப்பும் அளவுக்கு சமீபத்திய போட்டிகளில் தம்முடைய திறமையை நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க: கடைசி 2 போட்டியில் இதை செய்யலன்னா மனசாட்சியோட ரோஹித் ராஜினாமா செய்வாரு.. கவாஸ்கர் கணிப்பு
அத்துடன் சுந்தர் இடது கை பேட்ஸ்மேனாக இருக்கிறார். எனவே சூழ்நிலைக்கு தகுந்தார் போல் வலது கை பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் தானுஷ் விளையாட வாய்ப்புள்ளது. இடது கை பேட்ஸ்மேன் தேவைப்படும் போது இந்திய அணி சுந்தரை பயன்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளது. இதற்கிடையே குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோரும் காத்திருக்கிறார்கள். எனவே வாய்ப்பு கிடைக்கும் போது அந்த இருவரில் யார் அசத்துகிறார்களோ அவருக்கே வருங்காலத்தில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.