இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடி வருகிறார். நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோகித் தலைமையில் மோசமாக விளையாடி தோற்ற இந்தியா மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்தது.
அந்த தடுமாற்றத்திற்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் தாக்கத்தை ஏற்படுத்தாதது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் விளையாடும் அவர் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மேலும் கடைசி 13 இன்னிங்ஸில் ரோஹித் வெறும் 152 ரன்களை 11.83 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார்.
கேப்டன் ரோஹித்:
அதனால் சமீபத்தில் திடீரென ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு அடுத்ததாக ரோகித் சர்மாவும் விடை பெறலாம் என்று இந்திய ரசிகர்களே ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடைசி 2 போட்டியில் ரோஹித் சர்மா பெரிய ரன்கள் குவிக்காவிட்டால் தாமாக ஓய்வு பெறுவார் என்று சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ஏனெனில் அணிக்கு பாரமாக இருக்கக்கூடாது என்று ரோஹித் சர்மா நினைக்கக் கூடியவர் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக அடுத்த 2 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை ரோகித் சர்மா பெறுவார் என்று உறுதியாக சொல்வேன். ஆனால் அதனுடைய இறுதியில் ஒருவேளை அவர் ரன்கள் எடுக்காவிட்டால் ஓய்வு பற்றிய முடிவை ரோகித் சர்மா தமக்குத் தாமே எடுப்பார் என்பது என்னுடைய உணர்வாகும். ஏனெனில் ரோஹித் சர்மா மிகவும் மனசாட்சியுள்ள கிரிக்கெட்டர்”
மனசாட்சியுள்ள கேப்டன்:
“அவர் எப்போதும் அணிக்கு பாரமாக இருக்க விரும்ப மாட்டார். அவர் இந்திய கிரிக்கெட்டின் மீது மிகவும் ஆழமான அக்கறை கொண்டவர். எனவே அடுத்த 2 போட்டிகளில் ரன்கள் குவிக்காவிட்டால் ரோஹித் சர்மா தமக்குத் தாமே கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகுவார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல ஒருவேளை அடுத்த 2 போட்டிகளில் தோற்றால் இந்தியாவும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாது.
இதையும் படிங்க: ஓய்வுக்காக வருத்தப்படல இதுவே போதும்.. வாழ்க்கை கொடுத்த அதுக்கு நன்றி.. ஃபேர்வலை நம்பல.. அஸ்வின் உருக்கம்
அது போன்ற சூழ்நிலையில் ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற 100% வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே டி20 போட்டிகளிலிருந்து அவர் விடை பெற்றுள்ளார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.



