இந்திய அணிக்காக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு நிகராக அவர் அதிக தொடர்நாயகன் வென்றுள்ளார். மேலும் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிகபட்ச (765) விக்கெட்டுகள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார்.
2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அஸ்வின் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டில் 7வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனை படைத்துள்ளார். இவ்வளவு சாதனைகள் செய்தும் அவருக்கு இந்திய அணி வெளிநாடுகளில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது. அதனால் 38 வயதில் அஸ்வின் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுவே போதும்:
இந்நிலையில் 7வது அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக ஓய்வு பெற்றதில் உங்களுக்கு திருப்தியா? என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கேட்டார். அதற்கு ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “முதலில் நான் 7வது அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக நீண்ட காலம் இருக்க மாட்டேன். நேதன் லயன் அருகிலேயே இருக்கிறார். எனவே 8வது இடத்தில் அல்லது எனக்கான இடத்தில் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
“நான் சரியான வழியில் முடிவை எடுக்கிறேனே? என்ற கேள்வி எப்போதும் உங்களுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும். என்னுடைய விஷயத்தில் அது கொஞ்சம் வித்தியாசமானது. நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது. நான் எப்போதும் விஷயங்களை பிடித்துக் கொண்டிருக்கும் நபரும் கிடையாது. வாழ்க்கையில் ஒருபோதும் நான் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததில்லை”
அஸ்வின் உருக்கம்:
“இன்று என்னுடையது, நாளை என்னுடையதாக இருக்கும் என்பதையும் நம்பவில்லை. இதுவே இத்தனை வருடங்களாக என்னை உயர்த்திய காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். மக்கள் என்னைக் கொண்டாடுவதை நம்பாததால் அனைத்து விஷயங்களையும் என்னால் முடிந்த வரை விட்டு விட விரும்புகிறேன். இந்தியாவில் சில நேரங்களில் கிடைக்கும் கவன ஈர்ப்பை நான் நம்புவதில்லை”
“ஏனெனில் எல்லா நேரத்திலும் எனக்கு முன்னால் நிற்கும் விளையாட்டு இந்த கிரிக்கெட். ஓய்வு பற்றி சில முறை யோசித்தேன். என்னைப் பொறுத்த வரை படைப்பாற்றல் என் பக்கத்திற்கு அல்லது எதிர்காலத்திற்கு திசையில்லை என்ற உணர்வை கொடுக்கும் நாளில் அனைத்தையும் விட்டு விட முடிவெடுத்திருந்தேன்”
இதையும் படிங்க: சேவாக் கூட இப்படி செய்ய மாட்டாரு.. ஜெய்ஸ்வால் அவசரப்படுறாரு.. சேவாக்கிடம் கத்துக்கோங்க.. புஜாரா அறிவுரை
“அந்த நாள் திடீரென்று வந்ததாக உணர்ந்தேன். அதற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில் நான் அதைக் கடினமான வழியில் செய்ய வேண்டியிருந்தது. இந்த விளையாட்டு என்னை கண்டுபிடித்து எனது வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.



