
வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கியது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 6, சுப்மன் கில் 0 ரன்களில் ஹசன் மஹ்முத் வேகத்தில் அவுட்டானார்.
அப்போது களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 556 நாட்கள் கழித்து களமிறங்கிய அவர் இந்தியாவுக்காக பெரிய ரன்கள் குவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஹசன் மஹ்முத் வீசிய அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தை கவர் டிரைவ் அடிக்க முயற்சித்த விராட் கோலி 6 ரன்களில் அவுட்டானார்.
இந்நிலையில் கடந்த காலங்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோருக்கு எதிராக இதே போல அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் பலமுறை விராட் கோலி அவுட்டாகியுள்ளார். எனவே அந்த பலவீனத்தை வங்கதேச அணியின் அனலைஸ்ட் சரியாக பயன்படுத்தி விராட் கோலியை திட்டமிட்டு அவுட்டாக்கியதாக முன்னாள் வீரர் தமீம் இக்பால் கூறியுள்ளார். இது பற்றி ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சியின் நேரலை வர்ணனையில் அவர் பேசியது பின்வருமாறு.
“விராட் கோலி நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வந்துள்ளார். எனவே அவர் பந்தை கொஞ்சம் உணர்ந்து விளையாட விரும்பினார். அது அனைவருக்கும் நடக்கும். நாங்கள் அனைவரும் இந்த விளையாட்டில் விளையாடியுள்ளோம். சில நேரங்களில் நீங்கள் அப்படி பந்தை உணர்ந்து விளையாட விரும்புவீர்கள்”
“இருப்பினும் இன்று விராட் கோலி அவுட்டான இடத்தில் அவர் ஏற்கனவே பலமுறை அவுட்டாகியுள்ளார். இப்படி அவுட்டாவது எங்களுடைய அனலைஸ்டை மேஜிக் மனிதரைப் போல காட்டுகிறது. இது மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டது. விராட் கோலி அந்த வலையில் விழுந்துள்ளார்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் பட்டேல் இது பற்றி பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: முதல் நாளில் ஏற்பட்ட ஏமாற்றம்.. சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட் விலையை குறைத்த நிர்வாகம் – என்ன நடந்தது?
“விராட் கோலி நீண்ட காலம் கழித்து வருவதாக தமீம் சொன்னார். உண்மையில் அவர் 556 நாட்கள் கழித்து இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வந்துள்ளார். அப்படி நீங்கள் நீண்ட காலம் கழித்து விளையாட வரும் போது பந்தை உணர முயற்சித்தால் இப்படி தான் அவுட்டாவீர்கள்” என்று கூறினார். அந்த வகையில் இப்போட்டியில் சுமாரான துவக்கத்தை பெற்ற அதிலிருந்து மீண்டு வர போராடி வருகிறது.