- Advertisement -
ஐ.பி.எல்

அறிமுக முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய இளம் தமிழக வீரர் ! சிஎஸ்கேவுக்கு சவுக்கடி – முழு விவரம்

ஐபிஎல் 2022 தொடர் அசத்தலாக நடைபெற்று வரும் நிலையில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள லக்னோ – குஜராத் ஆகிய அணிகள் சந்தித்தன. புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மேலும் அந்த அணிக்கு தமிழகத்தின் சாய் கிஷோர் முதல் முறையாக அறிமுகமாக களமிறங்கினார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு 144/4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு ரித்திமான் சகா 5 (11) மேத்தியூ வேட் 10 (7) ஹர்டிக் பாண்டியா 11 (13) போன்ற நட்சத்திர முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற சுப்மன் கில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து 63* (49) ரன்கள் எடுக்க அவருடன் டேவிட் மில்லர் 26 (24) ரன்கள் சேர்த்தார். இறுதியில் அதிரடி காட்டிய ராகுல்  திவாடியா 4 பவுண்டரியுடன் 22* (16) ரன்கள் எடுக்க லக்னோ சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அவேஷ் கான் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

குஜராத் மிரட்டல்:
அதை தொடர்ந்து 145 என்ற சுலபமான இலக்கை துரத்திய லக்னோவை முதல் ஓவரிலிருந்தே அசத்தலாக பந்துவீசி அழுத்தம் கொடுத்த குஜராத் கேஎல் ராகுல் 8 (16) குயின்டன் டி காக் 11 (10) ஆகிய 2 முக்கிய முதுகெலும்பு பேட்ஸ்மேன்களை ஆரம்பத்திலேயே அவுட் செய்தது. அந்த நிலைமையில் அடுத்து வந்த க்ருனால் பாண்டியா 5 (5) ஆயுஷ் படோனி 8 (11) மார்கஸ் ஸ்டோனிஸ் 2 (2) ஜேசன் ஹோல்டர் 1 (2) ஆகிய முக்கிய வீரர்கள் குஜராத்தின் தரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சென்றனர். இறுதியில் தோல்வியைத் தவிர்க்க போராடிய தீபக் ஹூடாவும் 27 (26) ரன்களில் ஆட்டமிழக்க 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ வெறும் 82 ரன்களுக்கு சுருண்டது.

குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரசித் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் பங்கேற்ற 12 போட்டிகளில் 9-வது வெற்றியை பதிவு செய்து 18 புள்ளிகளுடன் ஐபிஎல் 2022 தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய லக்னோ 12 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்தாலும் தொடர்ந்து 2-வது இடத்தில் இருப்பதால் பிளே ஆஃப் வாய்ப்பில் உறுதியாக உள்ளது.

- Advertisement -

கலக்கிய சாய் கிசோர்:
முன்னதாக இப்போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய தமிழக இளம் வீரர் சாய் கிஷோர் பந்துவீச்சில் மிரட்டிக் கொண்டிருந்த ரசித் கானுக்கு உதவும் வகையில் வெறும் 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை 3.50 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்து அசத்தினார். உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்காகவும் டிஎன்பிஎல் டி20 தொடரில் அசத்தி இவரை இந்த வருட ஐபிஎல் தொடரில் 3 கோடி என்ற பெரிய தொகைக்கு குஜராத் அணி நிர்வாகம் வாங்கியது.

இருப்பினும் ஆரம்பத்தில் வாய்ப்பளிக்காத அந்த அணி நிர்வாகம் நேற்று கொடுத்த பொன்னான வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அவர் தனது முதல் போட்டியிலேயே திறமையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். குறிப்பாக அவரின் பந்துவீச்சை பற்றி குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டி பேசியது பின்வருமாறு. “சாய் கிசோரை ஒரு உயர்ந்த இடது கை சுழல் பந்துவீச்சாளராக நான் மதிப்பீடுவேன். ஏனெனில் எங்களிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் ஜெயந் யாதவுக்கு பதில் அவரைத் தேர்வு செய்தோம்” என்று கூறினார்.

- Advertisement -

சென்னைக்கு சவுக்கடி:
சென்னையை சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியதால் அவரின் திறமையை உணர்ந்த சென்னை 20 லட்சம் என்று அடிப்படை தொகைக்கு 2020 ஐபிஎல் தொடரில் வாங்கியது. ஆனால் 2020, 2021 ஆகிய 2 வருடங்களில் 1 வாய்ப்பு கூட வழங்காத அந்த அணி நிர்வாகம் பெஞ்சில் அமர வைத்து இறுதியில் கழற்றி விட்டது. அந்த நிலைமையில் அவரை நம்பி 3 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியதுடன் முக்கியமான நேரத்தில் வாய்ப்பளித்த குஜராத்துக்கு அசத்தலாக செயல்பட்ட சாய் கிசோர் தமக்கு வாய்ப்பு கொடுக்காத சென்னை நிர்வாகத்துக்கு தனது பந்து வீச்சால் சவுக்கடி கொடுத்துள்ளார் என்றே கூறலாம்.

அதனால் நல்லவேளை கடந்த வருடம் சிஎஸ்கே அவரை கழட்டிவிட்டதே நல்லது என்று தமிழக ரசிகர்கள் கூறுகின்றனர். இத்துடன் பாபா அபராஜித் போன்ற வீரர்களையும் இதே மாதிரி நடத்திய சென்னை நிர்வாகம் இறுதியில் கழற்றி விட்டது. இந்த வருடம் கூட ஹரி நிஷாந்த், நாராயணன் ஜெகதீசன் ஆகிய 2 தமிழக வீரர்கள் பெஞ்சில் அமர வைத்து அவர்களின் திறமையை வீணடித்து வருகிறது.

இதையும் படிங்க : விமர்சனங்களை விடுங்க. முன்னேறுவதற்கு இதை மட்டும் செய்யுங்க ! உம்ரான் மாலிக்க்கு ஜாம்பவானின் ஆலோசனை

மறுபுறம் குஜராத் போன்ற வட மாநில அணி இந்த வருடம் 12 போட்டிகளில் விஜய் சங்கர், சாய் சுதர்சன், சாய் கிசோர் ஆகிய 3 தமிழக வீரர்களுக்கு தேவையான வாய்ப்புகளை வழங்கியுள்ளது பாராட்டத்தக்கதாகும்.

- Advertisement -
Published by