விமர்சனங்களை விடுங்க. முன்னேறுவதற்கு இதை மட்டும் செய்யுங்க ! உம்ரான் மாலிக்க்கு ஜாம்பவானின் ஆலோசனை

Umran Malik 5 Fer
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுப் போட்டிகள் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. முதல் வாரத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் கடைசி இடத்தில் தவித்த அந்த அணி அதன்பின் வரிசையாக 5 வெற்றிகளை பெற்று டாப் 4 இடத்திற்குள் நுழைந்தது.

DC vs SRH Kane Williamson

- Advertisement -

ஆனால் அதன்பின் வரிசையாக 4 தோல்விகளை பெற்றதால் தற்போதைய நிலைமையில் எஞ்சிய 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் உள்ளது. இந்த வேளையில் அந்த அணிக்காக விளையாடிய தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயத்தால் விலகியதால் அந்த அணியின் பந்துவீச்சில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

விமர்சனத்தில் உம்ரான்:
குறிப்பாக அந்த அணியின் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ரன்களை வாரி வழங்கி வருகிறார். இந்த வருட துவக்கத்திலேயே 145 கி.மீ வேகப்பந்துகளை அசால்டாக வீசிய அவர் அதற்கு ஈடாக ரன்களை வாரி வழங்கியதால் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் பஞ்சாப், குஜராத் போன்ற அணிகளுக்கு எதிராக மின்னல் வேகத்தில் குறைவான ரன்களைக் கொடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்ததால் பாராட்டுகளை அள்ளினார். அதனால் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலுவான குரல்கள் எழுந்தன.

ஆனால் சமீபத்திய போட்டிகளில் குறிப்பாக டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியில் 157 கி.மீ வேகப்பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற சரித்திர சாதனை படைத்தார். இருந்தாலும் அதற்கு ஈடாக 52 ரன்களை வாரி வழங்கிய அவர் மீண்டும் விவேகம் இல்லாமல் இவ்வளவு வேகத்தில் வீசினால் விரைவில் கிரிக்கெட்டிலிருந்தே காணாம போய் விடுவீர்கள் என்றும் விரைவில் துல்லியமாக பந்துவீச கற்றுக் கொள்ளுங்கள் என்றும் விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

- Advertisement -

இதை செய்ங்க:
இந்நிலையில் சிறப்பாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்றும் உம்ரான் மாலிக்க்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் ஆலோசனை வழங்கியுள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் இயக்குனராக உள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் போன்ற உயர் மட்டத்தில் நீங்கள் விளையாடும்போது இதுபோன்ற களத்திற்கு வெளியே நடைபெறும் செயல்களை (விமர்சனங்கள்) விரைவில் கட்டுப்படுத்த வேண்டுமென உணர்வீர்கள். உங்களுக்கு நிறைய ஆலோசகர்கள் இருப்பார்கள். உங்கள் மீது நிறைய எதிர்பார்ப்புகள் வைப்பார்கள். ஆனால் உயர்மட்டத்தில் விளையாடும் நீங்கள் விரைவில் அதை (விமர்சனங்கள்) அனைத்தையும் மூடிவிட்டு என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்”

“உம்ரான் போன்ற நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் அதை எப்படி கையாள்வது என்பதை விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவில் அதை அவர் கற்றுக் கொள்கிறாரோ அந்த அளவுக்கு வெற்றியாளராக மாறமுடியும். எனவே அவரை சுற்றி பவுன்சர்கள் தேவையில்லை, பவுன்சர்களை வீசுவது முக்கியம்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது இதுபோன்ற விமர்சனங்களுக்கு காது கொடுக்காமல் அந்த விமர்சனங்களை எப்படி சிறப்பாக பந்துவீசி தடுத்து நிறுத்தலாம் என்ற வேலைகளில் உம்ரான் மாலிக் ஈடுபட வேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மன் கேட்டுக்கொண்டுள்ளார். அதுவரை இது போன்ற தேவையற்ற விமர்சனங்களை அவர் மீது பவுன்சர் போல வீசாமல் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Harbhajan

செலக்ட் பண்ணலாம்:
இப்படி விமர்சனங்களை சந்தித்தாலும் கூட திறமையள்ள அவரை தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வு செய்வேன் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது கருத்தை தெரிவித்தது பின்வருமாறு. “அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன். இந்தியாவுக்காக 150 கி.மீ வேகத்தில் பந்து வீசும் ஏதேனும் ஒரு பவுலரின் பவுலரை கூறுங்கள் பார்ப்போம். எனவே அவர் திறமையானவர்.

இதையும் படிங்க : வங்கதேச அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷாகிப் அல் ஹசன் – கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வ அறிவிப்பு

அவர் இந்த ஐபிஎல் தொடரின் வாயிலாக நிறைய இளைஞர்களுக்கு உத்வேகத்தை தரக்கூடியவராக உள்ளார். அவர் தேர்வு செய்யப்படுவாரா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் தேர்வு குழுவில் நான் இருந்தால் நிச்சயம் அவரை தேர்வு செய்வேன். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ஜஸ்பிரித் பும்ராவின் பார்ட்னராக அவர் இருந்தால் சிறப்பாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement