சுரேஷ் ரெய்னா செய்த அதே தவறால் இடத்தை இழந்து நிற்கும் தமிழக வீரர் – சீக்கிரம் சரி செய்வாரா?

Advertisement

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போராடி வருகின்றன. அந்த வகையில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவு செய்யா விட்டாலும் இடையிடையே வெற்றிகளை பதிவு செய்து வரும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற தேவையான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது.

CSK vs PBKS

அந்த வகையில் நடப்புச் சாம்பியன் சென்னைக்கு எதிரான தனது கடைசி போட்டியில் தேவையான மாற்றங்களை செய்து அந்த அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றி பெற்றது. அதில் முக்கிய மாற்றமாக அந்த அணிக்கு பினிஷெராக கருதப்பட்ட இளம் தமிழக வீரர் சாருக்கானை அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

இடத்தை இழந்த ஷாருக்கான்:
இந்த தொடரில் ஆயுஷ் படோனி, குல்டீப் சென், உம்ரான் மாலிக் உட்பட நிறைய இளம் வீரர்கள் தங்களது அபார திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில் தமிழகத்தின் வளர்ந்து வரும் இளம் வீரராக கருதப்படும் சாருக்கான் இந்த வருட ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியான போட்டிகளில் சொதப்பியதால் தனது இடத்தை இழந்து நிற்கிறார். கடந்த சில வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்ட அவர் 2020 சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் இமாச்சல பிரதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அதிரடியாக 19 பந்துகளில் 40* ரன்கள் விளாசி சூப்பரான பினிஷிங் செய்து தமிழகம் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

shahrukhan

அதை மீண்டும் செய்து காட்டும் வகையில் 2021 சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் கர்நாடகத்துக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் குறிப்பாக கடைசி பந்தில் வெற்றி 5 ரன்கள் தேவைப்பட்ட போது மெகா சிக்சரை அடித்த அவர் 33* (15) ரன்களை விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் மீண்டும் தமிழகம் சாம்பியன் பட்டத்தை வெல்ல துருப்புச் சீட்டாக செயல்பட்டார். அதன் காரணமாகவே கடந்த வருடம் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவரை சமீபத்தில் நடந்த ஏலத்தில் 9 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் மீண்டும் போட்டி போட்டு வாங்கியது.

- Advertisement -

சொதப்பிய ஷாருக்கான்:
அந்த நிலையில் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் உறுதியான இடத்தை பெறாத அவருக்கு இந்த வருடம் ஒரு நிலையான வாய்ப்பை கொடுக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அந்த வகையில் முதல் போட்டியில் அதிரடியாக 24* (20) ரன்கள் சேர்த்த அவர் அதன்பின் 0 (5), 6 (11), 15 (8), 15 (6), 26 (28), 12 (20) என வரிசையாக எந்த ஒரு போட்டியிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை என்ற காரணத்தால் சென்னைக்கு எதிரான போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டார். சரி இப்படி இடத்தை இழக்கும் அளவுக்கு பேட்டிங்கில் நிறைய தவறுகளை செய்யும் அவர் தடுமாறுவதற்கான ஒரு முக்கிய காரணத்தை பற்றி பார்ப்போம்.

Livinstone Sharukhan

1. இந்த வருட ஐபிஎல் தொடரில் அவர் சந்தித்த 7 போட்டிகளில் 52 பந்துகளை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சந்தித்துள்ளார். அதில் நல்ல (குட்) லென்த் அல்லது ஷார்ட் பிட்ச் வகையில் 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் அதில் வெறும் 9 ரன்கள் மட்டும் 40.90 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார்.

- Advertisement -

2. அதேசமயம் ஷார்ட் பிட்ச் பந்துகளை தவிர எஞ்சிய அல்லது இதர அனைத்து வகையான 30 பந்துகளை எதிர்கொண்ட அவர் அதில் 57 ரன்களை 190.00 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் அடித்துள்ளார். அதாவது ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ஷாருக்கான் தடுமாறுவது இதிலிருந்து வெளிப்படையாக தெரிகிறது.

Raina

இதற்கு முன் நட்சத்திர முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இதுபோன்ற ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறியதை நிறைய முறை பார்த்துள்ளோம். குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய ஷார்ட் பந்துகளில் அவர் நிறையவே தடுமாறினார். அதன் காரணமாக ஷார்ட் பிட்ச் பந்துகளை போட்டால் சுரேஷ் ரெய்னா அவுட்டாகி விடுவார் என்ற கருத்து கூட இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அது இந்திய அணியில் அவர் தனது இடத்தை இழப்பதற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.

இதையும் படிங்க : சென்னை அணி பிளேஆப் சுற்றுக்கு போகனுனா இந்த மேஜிக் நிகழ்ந்தால் மட்டும்தான் முடியுமாம் – நடக்குமா?

எனவே சுரேஷ் ரெய்னா எதிர்கொண்ட அதே பிரச்சனையை சந்தித்துள்ள சாருக்கான் கூடிய விரைவில் அதை சிறப்பாக எதிர்கொள்ள தேவையான டெக்னிக்கை கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Advertisement