இந்தியாவில் தற்போது 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இம்முறை இந்த உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருப்பதின் காரணமாக இந்த தொடரில் இறுதியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது அனைவது மத்தியிலும் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏப்ரல் 28-ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கும் அனைத்து அணிகளும் மே 1-ஆம் தேதிக்குள் தங்களுடைய அணியின் வீரர்களை கட்டமைத்து முழு பட்டியலையும் வெளியிடுமாறு ஏற்கனவே ஐசிசி கெடு விதித்துள்ளது.
மேலும் மே-26 ஆம் தேதி வரை அணியில் உள்ள மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்னும் ஒரு வாரம் இடைவெளிக்குள் இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி சிக்கி உள்ளது.
அதிலும் குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோர் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பெரிய குழப்பத்தை சந்திக்க உள்ளனர் என்று தெரிகிறது. ஏனெனில் தற்போது இந்திய அணியில் விளையாடும் வீரர்களை விட டொமஸ்டிக் வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக எந்த வீரர்களை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி : ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா, சிராஜ், அர்ஷ்தீப் சிங், சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் என 10 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 4, 4, 6, 4, 6, 6.. ஒரே ஓவரில் 30 ரன்ஸ்.. இளம் வீரர் மாஸ் சாதனை.. டெல்லியை அடக்கிய நடராஜன்.. ஹைதெராபாத் வெற்றி
அதேபோன்று அதிரடி வீரர்களான ஷிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற குழப்பம் நீடிக்கிறது. மேலும் ஸ்பின்னருக்கான இடத்தில் ரவி பிஷ்னாய், அக்சர் பட்டேல், சாஹல் ஆகியோருக்கு இடையே போட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு பேக்கப் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரில் ஒருவரையே தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எப்படி இருப்பினும் ஏப்ரல் 28-ஆம் தேதி டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் முழு பட்டியலும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.