நெருங்கியும் அதிர்ஷ்டமில்லை, கடவுள் நல்ல வழியை காட்டணும் – இந்திய அணி வாய்ப்பு பற்றி நடராஜன் பேசியது என்ன

Nattu
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் நடராஜன் தங்கராசு தனது கடினமான உழைப்பால் இந்தியாவுக்காக விளையாடி தமிழகத்திற்கும் தமிழக ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்த பெருமைக்குரியவர். ஆனால் தற்போது அவர் மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதே பல தமிழக ரசிகர்களின் கோபமாக இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்திலிருந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட துவங்கிய அவர் டிஎன்பிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக 2017 சீசனில் தனது கேரியரை துவங்கிய அவர் 2 விக்கெட்டுகளை மட்டும் எடுத்தாலும் 2020 சீசனில் 16 போட்டியில் 16 விக்கெட்டுகளை எடுத்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

nattu 1

- Advertisement -

ஓவரின் 6 பந்துகளிலும் யார்ர்க்கர் பந்துகளை வீசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அவரை தமிழக ரசிகர்கள் யார்கர் கிங் என கொண்டாடத் துவங்கினார்கள். அதன் காரணமாக 2020 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் முதலில் நெட் பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறியதால் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு அதிர்ஷ்டமாக கிடைத்தது.

கடவுள் வழி காட்டணும்:
அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றி மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் அடுத்ததாக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் கடைசி போட்டியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைந்து வெளியேறியதால் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அதிலும் அசத்திய அவர் மறக்க முடியாத காபா வெற்றியில் முக்கிய பங்காற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த நிலையில் அதன் பின் காயமடைந்து வெளியேறினார்.

Nattu

இருப்பினும் அதிலிருந்து குணமடைந்து 2022 சீசனில் 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்து அசத்தலாக செயல்பட்டு காயத்தால் வெளியேறிய அவர் தற்போது மீண்டும் குணமடைந்துள்ள போதிலும் மறு வாய்ப்பு கொடுக்காமல் இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ புறக்கணித்து வருவது தமிழக ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை நெருங்கியும் காயம் உட்பட ஏதோ ஒரு அதிர்ஷ்டமின்மையால் தவறி வருவதாக தெரிவிக்கும் நடராஜன் தொடர்ந்து உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணிக்கு விளையாட போராடி வருவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக கடவுளின் ஆசியுடன் 2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு முழு முயற்சியுடன் முயற்சிக்க உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கடந்த ஐபிஎல் தொடரில் எனது பழைய முழங்கால் காயத்தின் அருகில் மீண்டும் லேசான காயம் ஏற்பட்டது. அதற்காக நான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று சயீத் முஷ்டாக் அலி டிராபிக்கு முழுமையாக தயாராகி விளையாடினேன். துரதிர்ஷ்டவசமாக விஜய் ஹசாரே டிராபிக்கு அருகில் சென்ற போது மீண்டும் அந்த காயம் சில சிக்கல்களை ஏற்படுத்தியது”

Nattu

“அதனால் பயிற்சியாளர்கள் என்னை ஓய்வெடுக்கவும் முற்றிலும் போட்டிக்குத் தயாராகவும் அறிவுறுத்தினர். நான் கிட்டத்தட்ட இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பில் ஒவ்வொரு முறையும் நெருங்கி செல்லும் போது துரதிர்ஷ்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும் நம்பிக்கையுடன் கடவுளின் ஆசிர்வாதத்துடன் நான் மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் இந்த ஆண்டு மீண்டும் இந்திய அணிக்கு பரிசீலிக்கப்படுவேன் என நம்புகிறேன்”

இதையும் படிங்க: IND vs SL : 3 ஆவது போட்டியில் மாற்றம் இருக்குமா? முன்கூட்டியே பதிலளித்த – ரோஹித் சர்மா

“என்னை பொறுத்த வரை ஐபிஎல் மிகவும் முக்கியமாகும். ஏனெனில் அதுதான் என்னை இந்திய அணிக்கு கொண்டு சென்றது. எனவே கடந்த வருடத்தைப் போல இந்த வருடமும் நான் மிகச் சிறப்பாக செயல்பட்டு காயத்தை சந்திக்காமல் இருந்தால் நிச்சயமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார். அந்த வகையில் 4 கோடிக்கு ஹைதராபாத் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள நடராஜன் 2023 சீசனில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணிக்கு விளையாட போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement