டி20 உ.கோப்பையில் எல்லா டீமுக்குமே இவர் ஆபத்தானவராக இருப்பார் – இந்திய வீரரை பாராட்டும் ஆஸி கோச்

Virat Kohli Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்றாலும் அதற்கடுத்த போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்துள்ளது. இதே போல கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்ட இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது. ஆனாலும் அதற்காக துவளாமல் உலக டி20 சாம்பியனாக திகழும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து மீண்டெழுந்துள்ள இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறது.

முன்னதாக 1 – 1 என்ற கணக்கில் சமநிலை பெற்ற தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது ராகுல், ரோகித் ஆகிய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். அதனால் 30/2 என்ற சுமாரான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 3வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி உறுதி செய்தார். அதில் விராட் கோலி நிதானமாக 63 (48) ரன்கள் எடுத்தாலும் அவரை விட அதிரடியாக 5 பவுண்டரி 5 சிக்சருடன் 69 (36) ரன்களை குவித்த சூரியகுமாரின் அதிரடி ஆட்டம் தான் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

- Advertisement -

ஆபத்தானவர்:
அதனாலேயே ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் தற்சமயத்தில் இந்திய பேட்டிங் துறையில் 100% அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் ஒரே பேட்ஸ்மேனாக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார். 30 வயதில் இந்தியாவுக்கு அறிமுகமாகி கடந்த ஒன்றரை வருடங்களாக சக்கை போடு போட்டு வரும் 2022இல் அதிக டி20 ரன்கள் (682*) மற்றும் சிக்ஸர்கள் (42*) விளாசிய இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்து வருகிறார். மேலும் அறிமுகமானது முதல் எஞ்சிய இந்திய வீரர்களைக் காட்டிலும் அதிக பட்சமாக 6 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இந்தியாவின் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்து தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறி உலகக்கோப்பையை வென்று கொடுக்க பசியுடன் தயாராகி வருகிறார்.

இந்நிலையில் இந்த டி20 தொடரில் தங்களது தோல்விக்கு காரணமாக அமைந்த சூரியகுமார் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் ஆபத்தான பேட்ஸ்மேனாக இருப்பார் என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பாராட்டியுள்ளார். இது பற்றி ஹைதராபாத் போட்டிக்குப் பின் அவர் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் இன்று அபாரமாக விளையாடினார். அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் அனைவருக்கும் ஆபத்தானவராக அமைய போகிறார். அங்கு தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அவர் இங்கேயே செய்து காட்டியுள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -

அத்துடன் பேட்டிங் – பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அற்புதமாக செயல்படும் ஹர்திக் பாண்டியா இந்த தொடர் முழுவதும் தங்களது திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும் மிட்செல் ஸ்டார்க் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததால் இந்த தொடரில் டெத் பவுலிங்கில் சொதப்பி இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதைவிட சிறந்த டெத் பவுலிங்கை எங்களால் பெற முடியுமா? என்று கேட்டால் நிச்சயம் முடியும். இருப்பினும் எங்களது வீரர்கள் சிறந்த முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்த நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம். மேலும் ஹர்திக் பாண்டியா போன்றவர் எங்களுடைய திட்டங்களுக்கு இந்த தொடர் முழுவதும் தடையாக நின்றார்”

“ஆனாலும் எங்களது திட்டங்களில் நாங்கள் தொடர்ந்து வேலை செய்து வருகிறோம். அதே சமயம் உலக கோப்பைக்கு முன்பாக எங்களது திட்டங்கள் சில நல்ல முடிவுகளை கொடுத்ததையும் நாங்கள் பார்த்தோம். அத்துடன் இந்திய மண்ணுக்கும் ஆஸ்திரேலிய மண்ணுக்கும் வேகம், பவுன்ஸ் போன்ற சிறிய வித்தியாசங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்றார் போல் நாங்கள் திட்டங்களை தயார் செய்ய உள்ளோம்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட்டிடம் தோனியின் நிழலையும் ஸ்டைலையும் பார்க்கலாம் – முன்னாச் கோச் அதிரடி கருத்து

அந்த வகையில் மிட்செல் ஸ்டார்க் எங்களது அணிக்கு திரும்பும் போது எங்களுடைய டெத் பவுலிங் முன்னேற்றமடையும் என்று நம்புகிறேன். எனவே ஆஸ்திரேலியாவில் எங்களுடைய தடுமாற்றங்கள் சரியாகி விடும்” என்று கூறினார்.

Advertisement