
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை அக்டோபர் 29-ஆம் தேதி கான்பெர்ரா நகரில் நடைபெறயிருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்திருந்த வேளையில் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த டி20 தொடரினை கைப்பற்றும் வகையில் முனைப்புடன் தயாராகி வருகிறது. அதோடு டி20 போட்டிகளில் சாம்பியனாக இருக்கும் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அந்த சொந்த மண்ணில் எதிர்கொள்வதாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடரின் போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபே பந்து வீசுவரா? என்பது குறித்த கேள்விக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சுவாரஸ்யமான பதில்களை அளித்திருந்தார். அப்படி அவர் கூறியதாவது :
ஷிவம் துபே இந்த தொடரில் நிச்சயமாக பந்து வீசுவார். இங்குள்ள ஆடுகளங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும்? என்பது அவருக்கு தெரியும். ஏற்கனவே ஆஸ்திரேலியா வந்த அவர் பயிற்சியின் போது மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அதோடு தனது பந்துவீச்சில் தினமும் பயிற்சியும் செய்து வருகிறார்.
அவர் தொடர்ந்து பந்துவீசி பயிற்சி பெறுவதாலும் அவரது திறன் மீது எனக்கு நம்பிக்கை இருப்பதனாலும் ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தேன். கடந்த 8 முதல் 10 ஆண்டுகளாக நான் அவரை அருகில் இருந்து பார்த்து வருகிறேன். அவரால் நிச்சயம் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீச முடியும். எனவே இந்த ஆஸ்திரேலியா தொடரிலும் அவர் பந்து வீசுவார்.
இதையும் படிங்க : ஒன்னு இல்ல.. ரெண்டு பேர் வெயிட் பண்றாங்க.. சுப்மன் கில்லை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா – விவரம் இதோ
இந்த தொடருக்காக தனது பவுலிங்கில் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டுள்ள அவர் சரியான முறையில் தயாராகி வருகிறார். அதோடு அவரது திட்டம் என்ன? அவரது பந்துவீச்சில் என்ன செய்யலாம்? என்பது அவருக்கு நன்றாக தெரியும். எனவே அதற்கு ஏற்றவாறு அவருக்கு பந்துவீச வாய்ப்பினை வழங்குவேன் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.