IND vs AUS : அதே டீம்.. அதே கலர் பால்.. இதுக்காக எத்தனை நாள் கனவு கண்டேன் தெரியுமா – சூரியகுமார் நெகிழ்ச்சி பேட்டி

Suryakumar yadav
- Advertisement -

ஆசிய கோப்பை வெற்றியை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போடுகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 276 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதை துரத்திய இந்தியாவுக்கு கில் 71, ருதுராஜ் 74, கேஎல் ராகுல் 58*, சூரியகுமார் 50 ரன்கள் எடுத்து 48.4 ஓவர்களில் வெற்றி பெற வைத்தனர். இப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் நிறைய வீரர்கள் முக்கிய பங்காற்றிய போதிலும் சூரியகுமார் யாதவ் முக்கிய நேரத்தில் நங்கூரமாக நின்று கடைசியில் அதிரடியாக விளையாடி 50 (49) ரன்கள் குவித்ததை பாராட்ட வேண்டும் என்றே சொல்லலாம்.

- Advertisement -

கனவு இன்னிங்ஸ்:
ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் பொறுமையுடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறார். குறிப்பாக இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான அவர் மோசமான உலக சாதனை படைத்தார்.

அதனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற விமர்சனங்களை சந்தித்த அவர் அணி நிர்வாகத்தின் தொடர்ச்சியான ஆதரவால் 2023 உலகக் கோப்பைக்கு முன்பாக இப்போட்டியில் அசத்தி ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்தியாவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இந்த இன்னிங்ஸ் மகிழ்ச்சியை கொடுப்பதாக சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து தடுமாறி வரும் தாம் இது போன்ற இன்னிங்ஸ் விளையாடுவதை பல நாட்களாக கனவு கண்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட துவங்கியதிலிருந்து இது போன்ற இன்னிங்ஸ் விளையாட வேண்டுமென்ற நான் கனவு கண்டேன். குறிப்பாக கடைசி வரை பேட்டிங் செய்து போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கனவாகும்”

இதையும் படிங்க: அதுல கொஞ்சமும் மாறாத சஞ்சு சாம்சனை 2023 உ.கோ அணியில் கழற்றி விட்டது சரி தான்.. ஸ்ரீசாந்த் அதிரடி பேட்டி

“அது இன்று நடைபெறவில்லை என்றாலும் வெற்றிக்காக மகிழ்ச்சியடைகிறேன். மேலும் ஒரு கட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் எனக்கு என்னவாயிற்று என்று ஆச்சரியமடைந்தேன். ஏனெனில் பந்தின் நிறமும் எதிரணியும் பவுலர்களும் ஒன்றாகவே இருக்கின்றனர். ஆனால் நான் சற்று அவசரமாக விளையாடினேன் என்று நினைக்கிறேன். எனவே தற்போது சற்று நேரம் எடுத்து பொறுமையாக இருந்து கடைசி வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையுடன் விளையாட துவங்கியுள்ளேன்” என்று கூறினார்.

Advertisement