
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் நேற்று நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 165-9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 45 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் 3வது இடத்தில் களமிறங்கி அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாடிய திலக் வர்மா 72* (55) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அவருடன் ரவி பிஸ்னோய் 9*, அர்ஷ்தீப் 6, சுந்தர் 26 ரன்கள் எடுத்ததால் 19.2 ஓவரில் இந்தியா 166-8 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
அதனால் 2 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியா முன்னிலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தாம் கேப்டனாக வந்தது முதல் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை விளையாட வைத்து பேட்ஸ்மேன்கள் 2 – 3 ஓவர்கள் பவுலிங் செய்யும் டெம்ப்ளேட்டை கொண்டு வந்துள்ளதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். அந்த புதிய அணுகுமுறையுடன் ஒற்றுமையாக விளையாடினால் தங்களால் வெல்ல முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “போட்டி சென்ற விதத்தில் வெற்றியைப் பெற்ற விதம் கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது. 160 ரன்கள் சேசிங் நன்றாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். இங்கிலாந்து அணி நன்றாக பவுலிங் செய்ததால் போட்டி இந்தளவுக்கு ஆழமாக சென்றது. கடந்த 2 – 3 தொடர்களாக நாங்கள் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை விளையாடுகிறோம்”
“எங்களுக்கு அந்த வாய்ப்பு தேவைப்படுகிறது. அப்படியே பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு 2 – 3 ஓவர்கள் கொடுக்கிறார்கள். நாங்கள் அதிரடியான கிரிக்கெட்டை விளையாடுவதை பற்றி பேசுகிறோம். அதே சமயம் இது போன்ற சூழ்நிலை வந்தால் சிறிய பார்ட்னர்ஷிப் அமைப்பதற்கு எங்கள் வீரர்கள் தயாராக உள்ளார்கள். திலக் பேட்டிங் செய்த விதத்தை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது”
இதையும் படிங்க: கம்பீர் கொடுத்த மெசேஜ் தான் இதுக்கு காரணம்.. தெ.ஆ மண்ணிலேயே இதை பாத்துட்டோம்.. ஆட்டநாயகன் திலக் பேட்டி
“அவர் பொறுப்புடன் விளையாடுவதையும் பார்ப்பது நன்றாக உள்ளது. பிஸ்னோய் பேட்டிங்கில் பங்காற்றுவதற்காக வலைப் பயிற்சியில் கடினமாக உழைக்கிறார். அதற்கு இன்று அவர் வெளிப்படுத்திய செயல்பாடு எடுத்துக்காட்டு. அர்ஷ்தீப் ஆட்டத்தையும் மறக்கக்கூடாது. எங்கள் வீரர்கள் அழுத்தத்தை உள்வாங்குவதால் என்னாலும் சிறப்பாக செயல்பட முடிகிறது. குறிப்பிட்ட கிரிக்கெட்டின் பிராண்டை விளையாட விரும்பும் எங்கள் அணியின் சூழ்நிலை நன்றாக இருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருந்தால் நல்ல விஷயங்கள் நடைபெறும்” என்று கூறினார்.