
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் இந்தியா தோற்கடித்தது. செப்டம்பர் 26ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 202/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61, திலக் வர்மா 49*, சஞ்சு சாம்சன் 39, அக்சர் பட்டேல் 21* ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய இலங்கையை 20 ஓவரில் 202/5 ரன்களுக்கு இந்தியா போராடி கட்டுப்படுத்தியது. இலங்கைக்கு துவக்க வீரர் பதும் நிசாங்கா அதிரடியான சதத்தை அடித்து 107 (58) ரன்கள் குவித்தார். அவருடன் குசால் பெரேரா 58, சனாகா 22* ரன்கள் அடித்து அசத்திய போதிலும் ஃபினிஷிங் செய்யத் தவறினர்.
அடுத்ததாக வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இலங்கை அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக 2/2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு ஹசரங்கா வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் சூரியகுமார் 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் ஃபைனல் போல அமைந்த இப்போட்டியில் வெற்றி பெற மிடில் ஆர்டரில் சாம்சன், திலக் வர்மா முக்கிய ரன்கள் அடித்ததே காரணம் என்று இந்திய கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் அர்ஷ்தீப் சிங் திறமைகளைப் பார்த்துள்ளதால் சூப்பர் ஓவரை நம்பி வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஃபைனலுக்கு முன் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் அசத்தியுள்ளதால் பாகிஸ்தானை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கும் சூரியகுமார் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது ஃபைனல் போன்ற உணர்வைக் கொடுத்தது. 2வது இன்னிங்ஸின் முதல் பகுதிக்கு பின் எங்களுடைய வீரர்கள் நிறையப் போராட்டத்தைக் காண்பித்தனர்”
“நல்ல எனர்ஜியை கொண்டிருங்கள் என்று எங்களது வீரர்களிடம் சொன்னேன். அது எங்கே முடிகிறது என்பதைப் பார்ப்போம். நன்றாக பெற்ற துவக்கத்தை திலக், சஞ்சு ஆகியோர் அப்படியே எடுத்துச் சென்றதைப் பார்த்தது நன்றாக இருந்தது. குறிப்பாக ஓப்பனிங்கில் விளையாடாத சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடும் வேலையை பொறுப்புடன் எடுத்துக் கொண்டார். திலக் வர்மாவும் சிறந்த போராட்டத்தைக் காண்பித்ததைப் பார்த்தது நன்றாக இருந்தது”
இதையும் படிங்க: 6க்கு 6 வெற்றி.. மிரட்டிய இலங்கையின் நிஷாங்கா.. சூப்பர் ஓவரில் அடக்கிய இந்தியா.. சாதனை வெற்றி
“அர்ஷ்தீப் எங்களுக்காக கடந்த 2 – 3 வருடங்களாக அசத்தி வருகிறார். எனவே உங்களுடைய சொந்தத் திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று அவரிடம் சொன்னேன். இது போன்ற சூழ்நிலவுகளில் பலமுறை இருந்துள்ள அவர் இந்தியாவுக்காகவும் தனது ஐபிஎல் அணிக்காகவும் அசத்தியுள்ளார். அவருடைய தன்னம்பிக்கைக்கு சூப்பர் ஓவரை வீச அர்ஷ்தீப்பை விட வேறு யாரும் சிறந்தவர் இருக்க முடியாது. எங்களுடைய சில வீரர்கள் சோர்வடைந்துள்ளதால் நாளை புத்துணர்ச்சியடைந்து இன்று போல மீண்டும் வருவோம். குரூப் சுற்றில் எங்கள் வீரர்கள் அனைவரும் விரும்பியதைப் பெற்றனர். அதனால் நாங்கள் இறுதிப் போட்டிக்கு மகிழ்ச்சியாக செல்கிறோம்” என்று கூறினார்.