சூர்யகுமார் ஒன்னும் பெஸ்ட் டி20 பேட்ஸ்மேன்லாம் கிடையாது – டிம் சவுதி அளித்த வித்தியாசமான கருத்து

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்திய அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் நவம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மௌன்ட் மௌங்கனி நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சூரியகுமார் யாதவ் அதிரடியாக சதம் விளாசி எடுத்த 111* (51) ரன்கள் உதவியால் 20 ஓவர்களில் 191/6 ரன்களை சேர்த்தது.

Suryakumar Yadav

- Advertisement -

அதை துரத்திய நியூசிலாந்து தரமாக பந்து வீசிய இந்தியாவிடம் ஆரம்ப முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவரிலேயே 126 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 61 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 4 விக்கெட்கள் எடுத்தார். இந்த வெற்றிக்கு பவுலர்கள் முக்கிய பங்காற்றினாலும் பேட்டிங்கில் 111* ரன்களை தனி ஒருவனாக குவித்து அடித்தளமிட்ட சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஏனெனில் தரமாக பந்து வீசிய நியூசிலாந்து பவுவலர்களிடம் இதர இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சரணடைந்து வெறும் 69 (69) ரன்களை 100 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே சேர்த்தனர்.

பெஸ்ட் கிடையாது:

ஆனால் அதே நியூசிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கிய சூரியகுமார் யாதவ் மட்டும் 111* ரன்களை 217 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார். இப்போட்டி மட்டுமில்லாமல் அறிமுகமானது முதல் இப்போது வரை பெரும்பாலான போட்டிகளில் இதே போல எதிரணி எப்படி வந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் முதல் பந்திலிருந்தே மைதானத்தின் நாலாபுறங்களிலும் அடித்து நொறுக்கும் அவர் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவராலும் கொண்டாடும் அளவுக்கு மிரட்டி வருகிறார்.

Virat Kohli Suryakumar Yadav

பொதுவாக டி20 போட்டிகளுக்கு அடிப்படையான தேவை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் என்பார்கள். அந்த வகையில் பார்க்கும் போது ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இதர பேட்ஸ்மேன்களை காட்டிலும் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த டி20 பேட்ஸ்மனாக சூரியகுமார் கருதப்படுகிறார். இருப்பினும் சூரியகுமார் தரமான வீரர் என்றாலும் இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்று இப்போதே சொல்ல முடியாது என மூத்த நியூசிலாந்து வீரர் டிம் சௌதீ கூறியுள்ளார். நேற்றைய போட்டியில் கடைசி நேரத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்த அவர் இது பற்றி போட்டி முடிந்தபின் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவில் இருந்து பல சிறந்த டி20 வீரர்கள் உள்ளனர். அவர்களிடம் பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அந்த வகையில் சூரியகுமார் கடந்த 12 மாதங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் தற்போது அவர் செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து நிறைய காலங்கள் செய்ய வேண்டும். வரலாற்றில் இந்தியா டி20 மட்டுமல்லாமல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஏராளமான சிறந்த வீரர்களை உருவாக்கியுள்ளது”

Southee-1

“அவர்களிடம் வரலாற்றில் நிறைய வீரர்கள் நீண்ட காலம் சிறப்பாக விளையாடி ஏராளமான வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்துள்ளார்கள். அவர்களை போல சூரியகுமாரும் மைதானத்தில் பல வழிகளில் அடிக்கிறார். கடந்த 12 மாதங்களில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் அவர் அற்புதமான பார்மில் உள்ளார். இன்றைய போட்டியில் அவர் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் யாருமே இது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்துவது சகஜம் என்று தெரிவிக்கும் சவுத்தி தற்சமயத்தில் சூரியகுமார் வெளிப்படுத்தும் இதே செயல்பாடுகளை வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக நீண்ட வருடங்கள் வெளிப்படுத்தினால் மட்டுமே வரலாற்றில் இந்தியாவின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் என ஏற்றுக் கொள்ள முடியும் என்ற வகையில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs NZ : நியூசிலாந்துக்கு எதிரான இந்த வெறித்தனமான ஆட்டத்திற்கு காரணம் இதுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

எனவே வெறும் 12 மாதங்கள் சிறப்பாக விளையாடினார் என்பதை வைத்து உடனடியாக அவரை வரலாற்றின் சிறந்த இந்திய வீரர் என முடிவெடுத்து விட முடியாது என்ற வகையில் அவர் பேசியுள்ளார்.

Advertisement