
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்த தொடரில் இதுவரை மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது இன்று நடைபெற உள்ளது. அந்த வகையில் புனே மைதானத்தில் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெறும் இந்த நான்காவது போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்க இருப்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு இந்த தொடர் முழுவதுமே பேட்டிங்கில் சொதப்பி வரும் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் மீண்டும் இந்த போட்டியின் மூலம் பார்முக்கு திரும்ப வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஏனெனில் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர் நான்காவது டி20 போட்டியிலாவது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நான்காவது போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை சூர்யகுமார் யாதவ் படைக்க அதிக வாய்ப்புள்ளது.
அந்த வகையில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 146 சிக்ஸர்களை விளாசியுள்ள அவர் இன்றைய போட்டியில் மேலும் நான்கு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் குறைந்த போட்டிகளில் அதிக 150 சிக்ஸர்களை அடித்த வீரராக டி20 போட்டிகளில் சாதனை நிகழ்த்த காத்திருக்கிறார்.
இதையும் படிங்க : க்ரஸ் இருக்கான்னு என் மனைவி கேட்டாங்க.. 2021இல் ஸ்மித்தை அவுட்டாக்க போட்ட திட்டம் பற்றி அஸ்வின் பேட்டி
இந்த தொடரில் அவர் பேட்டிங்கை அதிரடியாகவே ஆரம்பித்தாலும் வெகு விரைவாக ஆட்டமிழந்து வருகிறார். ஆனால் இன்றைய போட்டியில் நிச்சயம் இந்த சாதனையை எட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதுவரை இந்திய அணிக்காக 81 டி20 போட்டியில் விளையாடியுள்ள அவர் 146 சிக்ஸர்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.