IND vs AUS : 2378 தருணங்களை மிஞ்சி நினைத்து பார்க்க முடியாத வரலாற்றின் மோசமான உலக சாதனை படைத்த சூர்யகுமார்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் சமனடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி மார்ச் 22ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவரில் ஆல் அவுட்டானாலும் 269 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 47, அலெக்ஸ் கேரி 38 ரன்கள் எட்க்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 30, சுப்மன் கில் 37, கேஎல் ராகுல் 32 என முக்கிய வீரர்களை நல்ல ரன்களை எடுத்து அவுட்டான நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 54 ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது களமிறங்கிய சூரியகுமார் மீண்டும் கோல்டன் டக் அவுட்டானது போட்டியில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது. ஏனெனில் அடுத்ததாக ஹர்திக் பாண்டியா 40, ரவீந்திர ஜடேஜா 18 என முக்கிய வீரர்களை அவுட்டாக்கி பினிஷிங் செய்யவிடாமல் இந்தியாவை 49.1 ஓவரில் 248 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

கோல்டன் சூர்யா:
அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. ஆனால் 2019க்குப்பின் முதல் முறையாக சொந்த மண்ணில் 26 தொடர்களுக்கு பின் தோல்வியை சந்தித்த இந்தியா உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் நம்பர் ஒன் அணி என்ற அந்தஸ்தையும் கோட்டை விட்டுள்ளது. முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்ததால் வாய்ப்பு பெற்ற சூரியகுமார் யாதவ் இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் மிட்சேல் ஸ்டார்க்கிடம் அச்சில் வார்த்தார் போல் ஒரே மாதிரியாக எல்பிடபிள்யூ முறையில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி லேட்டஸ்ட் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என கொண்டாடப்படுகிறார்.

- Advertisement -

ஆனால் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானது முதலே தடுமாற்றமாக செயல்படும் அவர் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காமல் 24.06 என்ற மோசமான சராசரியில் கடந்த 13 போட்டிகளாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பி வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே இருந்து வருகிறது. அந்த நிலையில் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டான அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டான முதல் இந்திய வீரர் என்ற பரிதாப சாதனை படைத்தார்.

அதனால் விமர்சனங்களை சந்தித்த அவருக்கு ரோகித் சர்மா தொடர்ந்து ஆதரவு கொடுத்ததால் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். ஆனால் அஷ்டன் அகர் வீசிய முதல் பந்திலேயே இம்முறை கிளீன் போல்டாகி கோல்டன் டக் அவுட்டான அவர் மீண்டும் அனைவருக்கும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். மொத்தத்தில் இத்தொடரின் 3 போட்டிகளிலும் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டான அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரின் 3 போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட்டாகி ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டை பதிவு செய்த முதல் வீரர் என்ற நினைத்துப் பார்க்க முடியாத பரிதாபமான மோசமான உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க:IND vs AUS : சென்னை ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட முறைகேடு. 12 பேர் கைது – வெளியான தகவல்

ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன் 2378 முறை பல்வேறு வீரர்கள் கோல்டன் அவுட்டாகியுள்ளார்கள். ஆனால் சூரியகுமார் மட்டும்தான் ஒரு தொடரின் 3 போட்டிகளிலும் தொடர்ந்து கோல்டன் டக் அவுட்டான முதல் வீரராக காலத்தால் அழிக்க முடியாத பரிதாப சாதனை படைத்துள்ளார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு தொடரில் 3 முறை டக் அவுட்டான முதல் இந்திய வீரர் என்ற பரிதாபத்திற்கும் சூரியகுமார் சொந்தக்காரராகியுள்ளார்.

Advertisement