ஐசிசி தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட சூர்யகுமார், நூலிழையில் காத்திருக்கும் மெகா உலக சாதனை

Suryakumar-Yadav
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற வரும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 2வது போட்டியில் போராடி வென்று சமன் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி பிப்ரவரி 1ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. இப்போட்டியின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் ஆட்டம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இத்தொடரின் முதல் போட்டியில் 47 (34) ரன்களை எடுத்து வெற்றிக்கு போராடிய அவர் பேட்டிங்க்கு சவாலாக இருந்த லக்னோ மைதானத்தில் தனது அதிரடி ஆட்டத்தை ஓரம் கட்டி விட்டு சூழ்நிலையை மதித்து இந்தியாவுக்காக மிகவும் பொறுமையாக விளையாடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

பொதுவாகவே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய அவர் இப்போட்டியில் வெறும் 1 பவுண்டரியுடன் 26* (31) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் இந்தியாவை போராடி வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக 180க்கும் மேற்பட்ட கேரியர் ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ள அவர் தனது கேரியரில் முதல் முறையாக இப்போட்டியில் தான் 30 பந்துகளை எதிர்கொண்டும் 100க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியது உண்மையாகவே பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

உச்சத்தில் சூர்யகுமார்:
ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் அந்த வாய்ப்பை வீணடிக்காமல் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே மைதானத்தின் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளையும் சிக்சர்கையும் பறக்க விட்டு பெரிய ரன்களை குவித்து வரும் அவர் விராட் கோலி உள்ளிட்ட இதர இந்திய வீரர்களை காட்டிலும் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்று டி20 கிரிக்கெட்டில் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக 2022 டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து அதிக சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிய அவர் 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதையும் சமீபத்தில் வென்றார்.

அதற்கு முன்பாகவே பாபர் அசாம், முஹமது ரிஸ்வான் போன்ற பாகிஸ்தான் வீரர்களை மிஞ்சி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறிய அவர் அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து அதிரடியாக செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக மடமடவென எகிறிய அவருடைய ரேட்டிங் புள்ளிகள் கடந்த மாதம் 900 புள்ளிகளை கடந்தது. அதன் வாயிலாக ஐசிசி ஆல் டைம் டி20 பேட்டிங் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்த முதல் இந்திய மற்றும் ஆசிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்த அவர் புதிய வரலாறு படைத்தார்.

- Advertisement -

இதற்கு முன் இந்தியாவின் விராட் கோலி 897 புள்ளிகள் தொட்டதே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா மட்டுமல்லாது ஆசிய கண்டத்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக அவதரித்த சூரியகுமார் இந்த நியூசிலாந்து தொடரில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் கூடுதல் புள்ளிகளை பெற்று ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் 910 புள்ளிகளுடன் தனது முதல் இடத்தை மேலும் வலுவாக தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

அத்துடன் ஆல் டைம் பேட்டிங் தரவரிசையில் 910 என்ற தனது கேரியரின் உச்சகட்ட புள்ளிகளை பெற்றுள்ள அவர் தொடர்ந்து 2வது இடத்தில் ஜொலிக்கிறார். முதலிடத்தில் கடந்த 2020 வாக்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 915 புள்ளிகளை பதிவு செய்த இங்கிலாந்தின் டேவிட் மாலன் உள்ளார். அந்த வகையில் கேரியரின் உச்சத்தை தொட்டுள்ள சூரியகுமார் யாதவ் இன்றைய 3வது டி20 போட்டியில் அல்லது அடுத்து நடைபெறும் போட்டிகளில் 50, 70 போன்ற ரன்களை குவித்து அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் மேலும் கூடுதல் புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கும் டேவிட் மாலனை மிஞ்சுவதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட்டில் முரளி விஜய் தெறிக்க விட்ட டாப் 5 சிறந்த இன்னிங்ஸ் – லிஸ்ட் இதோ

அது நடக்கும் பட்சத்தில் இந்த உலகிலேயே சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்ற புதிய மெகா உலக சாதனையை சூரியக்குமாறு படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement