ஈகோவை விட்டு கேரக்டரை மாற்றி இந்தியாவை வெற்றி பெற வைத்த சூரியகுமார் யாதவ் – நியூஸிலாந்துக்கு எதிராக புதிய உலக சாதனை

Suryakumar Yadav
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பி தோற்ற இந்தியா நிச்சயம் வென்றாக வேண்டிய 2வது போட்டியில் கடுமையாக போராடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக லக்னோவில் சுழலுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 99/8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அதை துரத்திய இந்தியாவுக்கு சுமன் கில் 11, இஷான் கிசான் 19, ராகுல் திரிபாதி 13 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

அதனால் 15/3 என சரிந்த நிலையில் அடுத்த களமிறங்கிய சூரியகுமார் யாதவ் வழக்கம் போல அதிரடியாக விளையாடி இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த 2 வருடங்களில் பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் அடித்து நொறுக்கி வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறினார்.

- Advertisement -

அசத்திய சூர்யா:
ஆனால் அப்படிப்பட்ட அவர் அதிரடியாக விளையாட முடியாத அளவுக்கு லக்னோ மைதானம் மிகப்பெரிய சவால் கொடுத்தது. அதனால் தன்னை உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை மறந்து மைதானத்திற்கும் சூழ்நிலைக்கும் மரியாதை கொடுத்து நிதானமாக பேட்டிங் செய்த அவர் வேகத்தை விட விவேகமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நங்கூரமாக சிங்கிள், டபுள் ரன்களை எடுத்தார். அதே பாணியில் கடைசி வரை அதிரடி காட்ட முடியாத அவர் ஒரு வழியாக கடைசி ஓவரின் 5வது பந்தில் முதல் பவுண்டரியை அடித்து 26* (31) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

உலகிலேயே அதிகபட்சமாக 180க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ள அவர் இப்போட்டியில் இந்தியாவுக்காக தனது ஈகோவையும் கேரக்டரையும் மாற்றி கேரியரிலேயே முதல் முறையாக 30+ பந்துகளை எதிர் கொண்டும் 83.87 என்ற 100க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் போராடி வெற்றி பெற வைத்தார். அவருடன் பாண்டியாவும் 15* (20) ரன்கள் எடுத்ததால் 19.5 ஓவரில் 101/4 ரன்கள் எடுத்து வென்ற இந்தியா 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் எங்களை வீழ்த்த முடியாது என்பதை நிரூபித்துள்ளது.

- Advertisement -

அதை விட எப்படி பந்து வீசினாலும் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கக்கூடிய சூரியகுமார் யாதவ் இப்போட்டியில் வெறும் 1 பவுண்டரியுடன் மிகவும் பொறுப்புடன் விளையாடியது நிறைய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே அமைந்தது. அப்படி கடினமான பிட்ச்சில் சூழ்நிலைக்கேற்றார் போல் விளையாடி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக செயல்பட்டு இந்தியாவை வெற்றி பெற காரணத்தாலேயே வெறும் 26 ரன்கள் குவித்தும் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

இந்த விருதையும் சேர்த்து நியூசிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா, பாகிஸ்தானின் பாபர் அசாம், உமர் குல், முகமது ரிஸ்வான், ஆஸ்திரேலியாவின் அஸ்டன் அகர், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில், அண்ட்ரே பிளட்சர், சுனில் நரேன், இலங்கையின் சனாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 2 ஆட்டநாயகன் விருதுகள் வென்றதே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: வெற்றிக்கான அந்த பவுண்டரியை அடிக்கும் முன்னர் பாண்டியா என்கிட்ட சொன்னது இதுதான் – சூர்யகுமார் யாதவ் பேட்டி

குறிப்பாக கடந்த நவம்பரில் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற தொடரில் சதமடித்து 1 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல முக்கிய பங்காற்றி அவர் ஆட்டநாயகன் விருது வென்றது மறக்கவே முடியாது. இதையடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியிலும் அவரின் ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்கு அவசியமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement