
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 63-வது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது. இந்த போட்டியின் போது மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவின் அசத்தலான ஆட்டம் காரணமாக அந்த அணி அபார வெற்றி பெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 43 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 73 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதனை தொடர்ந்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியானது 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரின் பிளே ஆப் வாய்ப்பையும் நான்காவது அணியாக உறுதி செய்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பின்னர் போட்டி முடிந்து தனது இந்த சிறப்பான செயல்பாடு குறித்து பேசியிருந்த ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது : தற்போது 13 போட்டிகளில் நாங்கள் விளையாடி முடித்துள்ளோம். ஆனால் இந்த போட்டிக்கு முன்னதாக என்னுடைய மனைவி கூறிய ஒரு வார்த்தை என்னை மிகச் சிறப்பாக செயல்பட வைத்தது. குறிப்பாக அவர் என்னிடம் வந்து இந்த தொடரில் அனைத்து விருதுகளையும் நீங்கள் வாங்கி விட்டீர்கள். ஆனால் ஆட்டநாயகன் விருதை மட்டும் வாங்கவில்லை என்று என்னிடம் தெரிவித்தார்.
எனவே இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்களது அணியின் வெற்றிக்கு என்னுடைய இந்த ஆட்டம் பெரிய பங்களிப்பை வழங்கியதிலும் மிகவும் மகிழ்ச்சி. இந்த விருதினை நான் என்னுடைய மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த போட்டியில் நான் விளையாடிய விதம் மற்றும் ஆட்டநாயகன் விருதினை வென்றது ஆகிய இரண்டுமே அவர்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.
இதையும் படிங்க : 163 ரன்ஸ் சேசிங்.. வங்கதேசத்தை மீண்டும் வீழ்த்திய அமீரக அணி.. புதிய வரலாற்றை எழுதி சாதனை வெற்றி
இந்த போட்டியை பொறுத்தவரை ஒரு பேட்டர் கடைசி வரை நின்றால் பெரிய ரன் குவிக்க முடியும் என்று நினைத்தோம். அந்த வகையில் இறுதிவரை நின்று ரன் குவித்ததில் மகிழ்ச்சி. கடைசி சில ஓவர்களில் ரன்களை அடிக்க முடியும் என்று காத்திருந்தேன். அந்தவகையில் கடைசி 2 ஓவர்களை டார்கெட் செய்து அடித்தோம். இந்த போட்டியில் நமன் திர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் போட்டிக்கு திருப்புமுனையாக அமைந்தது என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.