IPL 2023 : கேப்டன் கூல் தோனி அவ்ளோ கோபப்பட்டு பார்த்ததே இல்ல – 13 வருட பழைய நிகழ்வை பகிர்ந்த ரெய்னா

Raina
- Advertisement -

வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்கும் 2023 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை மட்டுமே பிடித்த அந்த அணி இந்த வருடம் அதிலிருந்து மீண்டெழுந்து 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதை விட 41 வயதை கடந்து விட்ட அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தனது கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் நடக்கும் என்று ஏற்கனவே அறிவித்தார். அந்த நிலையில் 2019க்குப்பின் மீண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த வருட ஐபிஎல் தொடருடன் அவர் விடை பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008 முதல் சென்னை அணியை மிகச்சிறப்பாக வழி நடத்தி பெரும்பாலான தொடர்களில் பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற அவர் 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2வது வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்து வருகிறார். முன்னதாக இந்தியாவுக்காகவும் சரி ஐபிஎல் தொடரிலும் சரி பெரும்பாலான சமயங்களில் தோல்வியே சந்தித்தாலும் அதற்காக பதறாமல் சூழ்நிலைகளை கச்சிதமாக சமாளிப்பதில் வல்லவரான தோனியை கேப்டன் கூல் என்று அனைவருமே அழைத்து வருகிறார்கள்.

- Advertisement -

நினைவு கூர்ந்த ரெய்னா:
ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் அவ்வப்போது தன்னகையும் கட்டுப்படுத்த முடியாமல் சில தருணங்களில் அவர் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் நோ-பால் என்று தெரிந்தும் வழங்காத நடுவர்களை நேரடியாக களத்திற்குள் சென்று “தோனியா இது” என்று வியக்கும் அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்தி நியாயத்தை தட்டி கேட்டார்.

அதை விட கடந்த 2010 ஐபிஎல் தொடரில் தரம்சாலாவில் நடைபெற்ற வாழ்வா சாவா போட்டியில் கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது இர்பான் பதானுக்கு எதிராக 4, 6, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட தோனி தனது ஹெல்மெட்டில் வேகமாக தன்னைத்தானே அடித்து கோபத்தை வெளிப்படுத்தி சென்னையை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். தோனி கோபப்பட்ட தருணங்களை புரட்டிப் பார்த்தால் நிச்சயமாக அந்த நிகழ்வு முதலிடம் பிடிக்கும் என்றே சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் அன்றைய நாளில் கோபப்பட்ட அளவிற்கு அதற்கு முன்பும் அதற்கு பின்பும் தோனி கோபப்பட்டு பார்த்ததில்லை என்று சர்வதேச அளவிலும் ஐபிஎல் தொடரிலும் அவருடன் 10 வருடங்களுக்கு மேல் இணைந்து விளையாடிய சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அந்த போட்டியில் 46 (27) ரன்கள் குவித்து சென்னையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

“அந்த சமயத்தில் நான் உடைமாற்றும் அறையில் இருந்தேன். அந்த ஐபிஎல் போட்டியில் கடைசி நேரத்தில் சிக்ஸர் அடித்த தோனி அதை விட வேகமாக தன்னுடைய ஹெல்மெட்டில் தன்னை அடித்தார். ஆனால் அவ்வாறு அவர் செய்ததை நான் எப்போதுமே பார்த்ததில்லை. குறிப்பாக வலைப்பயிற்சியில் அவுட்டாகும் போதோ அல்லது யாரேனும் சண்டையில் ஈடுபடும் போது கூட அவர் அவ்வளவு கோபத்தை வெளிப்படுத்தியதில்லை. இருப்பினும் அப்படி செய்தார் என்றால் அது அவருக்கு ஏதோ முக்கியமானது என்று அர்த்தம். மறுபுறம் எங்களுக்கெல்லாம் அந்த தருணம் அழுத்தமான சூழ்நிலையில் எப்படி உங்களது அணியை மீட்டெடுத்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற பாடமாக அமைந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க:9வது இடத்தில் அக்சர் பட்டேலை வெச்சுகிட்டு நாம இப்டி ஆடலாமா? உ.கோ வெல்ல இந்திய அணிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்

அந்த போட்டியில் வென்ற சென்னை பின்னர் அரையறுதியில் நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி மாபெரும் ஃபைனலில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பையை தோற்கடித்து முதல் கோப்பையை முத்தமிட்டது. அந்த கோப்பையை வெல்வதற்கு அந்த அடுத்தடுத்த சிக்சர்கள் தான் முக்கிய காரணமாகவும் அமைந்தது. ஒருவேளை அதன் அருமையை அப்போதே உணர்ந்த காரணத்தாலேயே தோனி அந்த சமயத்தில் அப்படி நடந்து கொண்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement