இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் போட்டியானது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் தனது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 231 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக களமிறங்கிய துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இருவரும் சதம் அடித்து அசத்தினர். சாய் சுதர்சன் 51 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 103 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார்.
அதேபோன்று சுப்மன் கில் 55 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவருமே முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் அடித்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க குஜராத் அணி 231 ரன்களுக்கு சென்றது. பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் இணைந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார். அதிலும் குறிப்பாக குஜராத் அணி சார்பாக துவக்க வீரர்களாக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் அடித்த ஜோடி என்ற சாதனையை நிகழ்த்தினர்.
கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் 147 ரன்கள் அடித்தது இதுவரை சாதனையாக இருந்த வேளையில் அதனை தகர்த்து தற்போது 210 ரன்கள் குவித்துள்ளனர். அதேபோன்று சுப்மன் கில் ஐபிஎல் கிரிக்கெட்டில் நான்காவது சதத்தை அடித்துள்ள வேளையில் முதல் தமிழக வீரராக சாய் சுதர்சன் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.
இதையும் படிங்க : 183 ரன்ஸ்.. வலுவான பாகிஸ்தானை வீழ்த்தி அப்செட் செய்த அயர்லாந்து.. 17 வருட சாதனை வெற்றி
மேலும் குறைந்த போட்டிகளில் 1000 ஐ.பி.எல் ரன்களை தொட்ட இந்திய வீரர் என்ற சாதனையும் சாய் சுதர்சன் நிகழ்த்தியுள்ளார். அதோடு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் 96 ரன்கள் எடுத்திருந்ததே சாய் சுதர்சனின் அதிகபட்ச ரன்களாக இருந்த வேளையில் இன்று தனது சதத்தை அவர் பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது.