
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 2023 உலகக் கோப்பைக்கு பின் பெரியளவில் அசத்தாக அவர் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். எனவே ஜஸ்ப்ரித் பும்ராவை துணை கேப்டனாக நியமித்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.
இந்நிலையில் சுப்மன் கில் வருங்காலத்தில் இந்திய அணியை கேப்டனாக தலைமை தாங்கும் திறமையை கொண்டிருப்பதாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். குறிப்பாக விராட் கோலியை போல் அணியை வழி நடத்தும் திறமை அவரிடம் இருப்பதாக ரெய்னா வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார். அதை ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் கண்டறிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ரெய்னா பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார். ஒருநாள் அணியில் அவர் நன்றாக விளையாடியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடரில் இளம் வீரருக்கு துணை கேப்டன்ஷிப் போன்ற பொறுப்பை கொடுப்பது அவருடைய தன்மையை பேசுகிறது. யார் அடுத்த கேப்டனாக வேண்டும் என்பது பற்றி ரோகித் சர்மாவுக்கு தெளிவாக தெரியும்”
“சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் நாம் பார்த்த சிறந்த கேப்டன்களில் ஒருவர். குஜராத் அணியை அவர் நன்றாக வழி நடத்துகிறார். கடந்த 12 – 16 மாதங்களில் அவர் வெளிப்படுத்திய செயல்பாடுகள் இந்த முடிவை நியாயப்படுத்துகிறது. அதனாலேயே ரோஹித் சர்மாவும் அவருடன் துவக்க வீரராக விளையாடி வருகிறார்”
“இது ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்களிடமிருந்து சிறந்த நகர்வு. கில் கிட்டத்தட்ட விராட் கோலி போல எப்படி அணியை வழி நடத்துகிறார் என்பதை ரோகித் பார்த்துள்ளார். களத்தில் அவருடைய வேலை நெறிமுறைகள் நன்றாக இருக்கிறது. அணியை முன்னின்று வழிநடத்துவது பற்றி தெரிந்து வைத்துள்ள கில்லுக்கு போட்டியை பற்றிய வலுவான விழிப்புணர்வும் இருக்கிறது”
இதையும் படிங்க: அவர் தான் வருங்கால கேப்டன்.. அதுக்குன்னு கில்லுக்காக ஜெய்ஸ்வாலை லெவனில் விட்றாதீங்க.. ஹர்பஜன் பேட்டி
“எனவே இது தேர்வாளர்கள் மற்றும் ரோகித் சர்மாவிடமிருந்து நல்ல முடிவு” என்று கூறினார். முன்னதாக ஐபிஎல் தொடரில் கடந்த வருடம் மட்டுமே சுப்மன் கில் குஜராத் அணியை வழி நடத்தினார். அவருடைய தலைமையில் குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. சொல்லப்போனால் அவரது தலைமையில் குஜராத் எட்டாவது இடத்தை பிடித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.