இவரை கழற்றிவிட எப்படி மனசு வந்தது? ஐபிஎல் வரலாற்றில் ரெய்னாவின் வியக்க வைக்கும் சாதனைகள் – லிஸ்ட் இதோ

Raina
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் பெங்களூருவில் 2 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தமாய் 590 வீரர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில் 204 வீரர்கள் மட்டுமே 551 கோடி ரூபாய்களுக்கு வாங்கப்பட்டுள்ளார்கள். இந்த ஏலத்தில் எதிர்பாராத சில வீரர்கள் விற்கப்படாமலும் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

CSK-Auction

- Advertisement -

இந்த ஏலத்தில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுக்கு தேவையான 25 வீரர்களையும் முழுமையாக வாங்கியுள்ளது. அதிகபட்சமாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் 14 கோடிகளுக்கு அந்த அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கழற்றிவிடப்பட்ட சுரேஷ் ரெய்னா:
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக காலம் காலமாக விளையாடி வந்த நட்சத்திர இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவை அந்த அணி நிர்வாகம் வாங்காதது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது முதல் சென்னை அணிக்காக விளையாடி வந்த அவர் எதிரணி பந்து வீச்சாளர்களை சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு சென்னைக்காக பல சரித்திர வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்.

Suresh raina

ஆரம்ப காலகட்டங்களில் சுரேஷ் ரெய்னா என்ற பெயரைக் கேட்டாலே எதிரணிகள் கலங்க கூடிய தருணங்களில் பல சாதனைகளை அசால்டாக படைத்த அவரை மிஸ்டர் ஐபிஎல் என கிரிக்கெட் வல்லுநர்கள் அழைத்து வருகிறார்கள். மேலும் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்குப் பின் அடுத்த கேப்டன் என்று அளவுக்கு உயர்ந்த அவரை சென்னை ரசிகர்கள் “சின்ன தல” என்று கொண்டாடி வந்தார்கள். கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை தடைபெற்ற போது குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய அவர் அதன்பின் மீண்டும் சென்னை அணியில் இணைந்து விளையாடி வந்தார்.

- Advertisement -

எப்படி மனசு வந்தது:
இப்படி சென்னை அணியின் ஒரு இதயமாக துடித்துக்கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா கடந்த 2019க்கு பின் முதல் முறையாக ரன்கள் குவிக்க தடுமாறி மோசமான பார்மில் இருந்து வருவதால் அவரை தற்போது சென்னை அணி நிர்வாகம் கழட்டிவிட்டுள்ளது. இத்தனைக்கும் 25 வீரர்களை வாங்கியது போக இன்னும் கூட அந்த அணி நிர்வாகத்திடம் 2.90 கோடிகள் ஏலத்தொகை மீதம் உள்ளது. எனவே மற்ற அணிகள் அவரை வாங்க முன் வராத நிலையில் குறைந்த பட்சம் அடிப்படை விலையில் வாங்கியாவது அவரை பெஞ்சிலாவது அமர வைத்திருக்கலாம் என்ற நியாயமான கருத்துடன் பல சென்னை ரசிகர்கள் சென்னை மீது மிகுந்த கோபத்துடன் உள்ளார்கள்.

suresh

மொத்தத்தில் ஒரு காலத்தில் மிஸ்டர் ஐபிஎல் என ராஜாவாக ஜொலித்து வந்த சுரேஷ் ரெய்னா தற்போது ஏலம் போக முடியாமல் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலையை எண்ணி ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளார்கள். சரி இந்த வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் படைத்துள்ள முக்கிய சாதனைகளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. கடந்த 2008 முதல் 2019 வரை நடந்த அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் தொடர்ந்து 400+ ரன்களை அடித்துள்ள சுரேஷ் ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக சீசன்களில் 400 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

suresh

2. ஐபிஎல் கிரிக்கெட்டில் தற்போது தான் விராட் கோலி அதிக ரன்களை குவித்த வீரராக முதலிடத்தில் உள்ளார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை அந்த இடத்தில் இருந்த மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5000 ரன்களை தொட்ட முதல் வீரர் என்ற மகத்தான சரித்திரத்தை படைத்துள்ளார்.

- Advertisement -

3. இதுவரை 203 சிக்சர்களை பறக்க விட்டுள்ள அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

raina 1

4. அத்துடன் இதுவரை 109 கேட்ச்களை பிடித்துள்ள அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த வீரராக ஆல் டைம் சாதனை படைத்துள்ளார்.

5. மேலும் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்களை தெறிக்கவிட்ட பேட்ஸ்மேன் என்ற மிரட்டலான சாதனையையும் அவர் படைத்துள்ளார் (87 ரன்கள்).

raina 1

6. அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸ் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்களை விளாசிய வீரர் என்ற மகத்தான சாதனையையும் சுரேஷ் ரெய்னா படைத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் வெறும் 25 பந்துகளில் 87 ரன்களை 348.00 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட் விகிதத்தில் விளாசி இந்த சாதனை படைத்துள்ளார்.

7. பொதுவாக நாக்அவுட் சுற்று போட்டிகளில் ரன்கள் அடிப்பது என்பது எந்த ஒரு மகத்தான வீரருக்கும் கடினமான செயலாகும். ஆனால் ஐபிஎல் வரலாற்றில் நடந்த நாக்-அவுட் எனப்படும் பிளே ஆப் சுற்று போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரராக சுரேஷ் ரெய்னா தான் முதலிடத்தில் சாதனை படைத்துள்ளார். இவர் ஐபிஎல் நாக் – அவுட் போட்டிகளில் அதிக பட்சமாக 714 ரன்களை விளாசியுள்ளார்.

raina

8. அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் பைனல்களில் அதிக ரன்களை அடித்த பேட்டர் என்ற மாஸ் சாதனைக்கும் சுரேஷ் ரெய்னா சொந்தக்காரர் ஆவார். இவர் பங்கேற்ற ஐபிஎல் பைனல்களில் 249 ரன்களை அடித்து இந்த சாதனை புரிந்துள்ளார்.

9. மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட்டில் தற்போதும் கூட அதிக ரன்கள் குவித்த 4-வது வீரராக சுரேஷ் ரெய்னா மின்னுகிறார். அதைவிட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக அவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணிக்கு ஏற்பட்ட பின்னைடைவு. ஐ.பி.எல் போட்டிகளை தவறவிடும் மேக்ஸ்வெல் – காரணம் என்ன?

10. முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற 2010ஆம் ஆண்டு அந்த அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் அவரையே சேரும். இப்படிப்பட்ட இவர் சென்னை அணியுடன் சேர்ந்து 4 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார்.

Advertisement