இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சிறந்த மிடில் ஆர்டர் இடது கை பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 2021 வரை விளையாடிய அவர் தோனி தலைமையில் 4 கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றினர். அதனால் மிஸ்டர் ஐபிஎல் மற்றும் சின்னத் தல என்று ரசிகர்களால் பாரட்டப்படும் ரெய்னா ஓய்வுக்கு பின் லெஜெண்ட்ஸ் லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.
அந்த வரிசையில் அமெரிக்காவில் நேஷனல் கிரிக்கெட் லீக் எனும் டி10 தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் சுரேஸ் ரெய்னா நியூயார்க் லயன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெற்ற 2வது லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை நியூயார்க் எதிர்கொண்டது.
அமெரிக்காவில் அசத்தல்:
அப்போட்டியில் டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூயார்க் அணிக்கு அசாத் ஷபிக் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் இலங்கையின் முன்னாள் துவக்க வீரர் உபுல் தரங்கா ஜோடி சேர்ந்து விளையாடினார்.
அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து அசத்தியது. அதில் தரங்கா 40 (23) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த மெகா சிக்ஸர்களை பறக்க விட்ட ரெய்னா பவுண்டரியும் அடித்து ஒரே ஓவரில் மொத்தம் 18 ரன்கள் குவித்தார்.
ஆட்டநாயகன் ரெய்னா:
தொடர்ந்து இன்னும் சில பவுலர்களுக்கு எதிராக முட்டி போட்டு, இறங்கி வந்து தம்முடைய ஸ்டைலில் விளையாடிய ரெய்னா 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 53* (28) ரன்களை 189.29 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து சூப்பர் ஃபினிஷிங் செய்தார். அவருடன் பென் கட்டிங் 12* (7) ரன்கள் எடுத்ததால் 10 ஓவரில் நியூயார்க் 126-2 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து சேசிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் அணி முடிந்தளவுக்கு போராடியும் 10 ஓவரில் 107-7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையும் படிங்க: இந்திய அணி போல.. பாண்டியாவை கழற்றி விட்டு மும்பை அணிக்கும் கேப்டனாக ஆவீர்களா? சூர்யகுமார் பதில்
அந்த அணிக்கு ஆடம் ரோஸிங்டன் 31 (15), ஷாகிப் அல் ஹசன் 13 (16), கேப்டன் டிம் டேவிட் 19 (10), ஜோ பர்ன்ஸ் 17 (9) ரன்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. நியூயார்க் அணிக்கு அதிகபட்சமாக சௌரியா கௌர், டாமினிக் ட்ரெக்ஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூயார்க் அணிக்கு வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடி 1 கேட்ச்சும் பிடித்து முக்கிய பங்காற்றிய ரெய்னா ஆட்டநாயகன் விருதை வென்றார்.