தோனி, விராட் கோலி இல்ல, ஐபிஎல் கிங்கான அவர் தான் என்னோட ரோல் மாடல் – ரிங்கு சிங் உற்சாக பேட்டி

Rinku Singh
- Advertisement -

இந்தியாவில் வளர்ந்து வரும் நிறைய இளம் கிரிக்கெட் வீரர்களில் ரிங்கு சிங் தற்போது அனைவரது பாராட்டுகளையும் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றவராகவும் மாறி வருகிறார். உத்திரபிரதேசத்தில் சிலிண்டர் விநியோகம் செய்பவரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அவர் கடந்த 2018 முதலே கொல்கத்தா அணியில் தேர்வாகி பெஞ்சில் அமர்ந்து வந்தார். அப்படியே காலங்கள் உருண்டோடிய நிலையில் கடந்த 2022 சீசனில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி கொல்கத்தாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த அவர் முதல் முறையாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் காரணமாக இந்த வருடம் முழுமையான வாய்ப்புகளை பெற்ற அவர் அழுத்தமான மிடில் ஆர்டரில் 14 போட்டிகளில் 474 ரன்களை 149.53 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அனைவரது பாராட்டுகளைப் பெற்றார். குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்களை அடித்த அவர் மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

ரிங்குவின் ரோல் மாடல்:
மறுபுறம் இந்திய அணியில் தற்சமயத்தில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சம் நிலவுவதால் 2024 டி20 உலக கோப்பையில் மிடில் ஆர்டரில் ஃபினிஷராக செயல்படும் அளவுக்கு திறமையை கொண்ட ரிங்கு சிங் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் தேர்வு செய்யப்படாததால் உச்சகட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில் அடுத்ததாக வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் தங்களுடைய மாநிலத்தில் பிறந்து 2011 உலக கோப்பை உட்பட இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய சுரேஷ் ரெய்னா தான் தம்முடைய ரோல் மாடல் என்று ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். பொதுவாக சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் தான் நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் நிலையில் மிஸ்டர் ஐபிஎல் என்று பெயர் பெற்ற ரெய்னா தம்முடைய குரு என்று தெரிவிக்கும் அவர் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்தளவுக்கு வளர நிறைய உதவிகளை செய்துள்ளதாகவும் நன்றி மறவாமல் பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய ரோல் மாடல் சுரேஷ் ரெய்னா. அவருடன் நான் தொடர்ந்து தொடர்பிலிருந்து பேசி வருகிறேன். மேலும் ஐபிஎல் தொடரின் கிங்கான அவர் எப்போதும் எனக்கு நிறைய ஆலோசனைகளையும் உள்ளீடுகளையும் கொடுத்து வருகிறார். அதே போல பஜ்ஜு பா (ஹர்பஜன்) என்னுடைய கேரியரில் வளர்வதற்கு நிறைய உதவிகளை செய்துள்ளார். அவர்களுடைய ஆதரவுக்கு நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் அவர்களைப் போன்ற பெரிய வீரர்கள் உங்களைப் பற்றி பேசும் போது அதுவே உங்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைகிறது” என்று கூறினார்.

மேலும் இந்தியாவுக்காக முதல் முறையாக விளையாடுவது பற்றி ரிங்கு சிங் மேலும் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து நாட்டுக்காக விளையாடுவது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். அந்த வகையில் அதை நான் அணிந்து விளையாடும் போது என்னை விட என்னுடைய குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்பது எனக்கு தெரியும். இந்த வாய்ப்புக்காக அவர்களும் நீண்ட வருடங்களாக காத்திருக்கின்றனர். எனவே இந்தியாவுக்காக விளையாடப் போகும் அன்றைய நாளை நான் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்”.

இதையும் படிங்க:ஒரு வழியாக இந்தியாவுக்கு முழு கம்பேக் கொடுக்கும் பும்ரா, எந்த தொடரில் தெரியுமா? விவரம் இதோ

“அத்துடன் நான் மனதளவில் வலுவானவனாக இருந்தாலும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் போது சற்று கண்ணீர் சிந்து விடுவேன் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். அந்த வகையில் ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு துலீப் கோப்பையில் விளையாடிய ரிங்கு சிங் அடுத்ததாக தியோதர் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடி இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement