விராட் கோலி தனது 100வது டெஸ்ட்டில் செஞ்சுரி அடிச்சே ஆகனும். அதுவே எனது ஆசை – விருப்பத்தை தெரிவித்த ஜாம்பவான்

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் மொஹாலியில் துவங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் 2வது போட்டி வரும் மார்ச் 12ஆம் தேதியன்று பெங்களூருவில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடப்பட உள்ளது.

IND

- Advertisement -

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கையை பந்தாடிய இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றி பெற்றது போலவே இந்த தொடரையும் இந்தியா வெற்றி பெறும் என கணிக்கப்படுகிறது.

விராட் கோலி – 100வது டெஸ்ட்:
முன்னதாக நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு எடுத்து வந்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்கள். இதில் குறிப்பாக முதல் போட்டி நடைபெறும் பஞ்சாப் மாநிலம் மொஹாலி மைதானத்தில் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக காலடி வைத்த அவர் அதன்பின் தனது அபார திறமையால் படிப்படியாக வளர்ந்து இன்று இந்திய பேட்டிங் துறையில் முக்கிய முதுகெலும்பு வீரராக உருவெடுத்துள்ளார்.

IND

அத்துடன் 2014ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற போது 7வது இடத்தில் தவித்த இந்தியாவை 2016 முதல் தொடர்ந்து உலகின் நம்பர் உன் டெஸ்ட் அணியாக வெற்றி நடை போட வைத்தார். அதுவரை சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெற்றும் அணியாக இருந்த இந்தியாவை உலகின் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறும் மாற்றிய அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். மொத்தத்தில் 68 போட்டிகளில் 40 வெற்றிகளை கேப்டனாக பெற்றுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்திருந்த வேளையில் கடந்த மாதம் திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகி தற்போது சாதாரண வீரராக விளையாட துவங்கியுள்ளார்.

- Advertisement -

100வது போட்டியில் சதம் அடிங்க:
சச்சினுக்கு பின் இந்திய கிரிக்கெட்டின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி கடந்த 2019 பின் ஒரு சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதன் காரணமாக பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தும் வண்ணம் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் இனிமேல் பணிச்சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட உள்ளார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் இருந்து வரும் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க வேண்டும் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

kohli

இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “அவர் தனது 100வது டெஸ்ட் போட்டியை சதம் அடித்து கொண்டாடுவார் என நம்புகிறேன். அது போன்ற அரிதான விஷயத்தைப் பலர் செய்தது கிடையாது. அனேகமாக கோலின் காவ்ட்ரே 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனை படைத்து தனது 100வது போட்டியில் சதமடித்தார் என நினைக்கிறேன். அதே போல் ஜாவேத் மியாண்டட், அலெஸ் ஸ்டீவர்ட் ஆகியோர் தங்களின் 100வது போட்டியில் சதம் அடித்தார்கள்” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பதே பெரிய சாதனையாகும். அப்படிப்பட்ட 100வது போட்டியில் ஒரு சதம் அடிப்பது என்பது மிகவும் அரிதான சாதனையாகும். அந்த வகையில் இதுநாள் வரை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 போட்டிகளில் விளையாடிய சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற எந்த ஒரு வீரரும் தங்களின் 100வது போட்டியில் சதம் அடித்தது கிடையாது. சொல்லப்போனால் உலக அளவில் வெறும் 9 வீரர்கள் மட்டுமே தங்களின் 100வது போட்டியில் சதமடித்து உள்ளார்கள்.

kohli century

எனவே தமக்கு ஏற்பட்டுள்ள பொன்னான வாய்ப்பில் விராட் கோலி சதம் அடித்து சாதனை படைக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் தனது ஆசையை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்காக 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ள சுனில் கவாஸ்கர் தனது 100வது போட்டியில் 48 ரன்களில் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடம் பிடிக்கும் 71வது சதம்:
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசி ஏற்கனவே தன்னை ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மென் என நிரூபித்துள்ள விராட் கோலியை தொடமாட்டேன் என்ற வகையில் அவரின் 71வது சதம் வராமல் கடந்த 2 வருடங்களாக அடம்பிடித்து வருகிறது. எனவே இந்த 100வது மைல்கல் போட்டியில் சதமடித்து அந்த மோசமான கதைக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

kohli 1

100வது போட்டியில் விளையாடும் விராட் கோலியின் சாதனை பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது நிச்சயமாக ஒரு மிகச் சிறந்த சாதனமாகும். பள்ளிச் சிறுவனாக நாம் கிரிக்கெட் விளையாடத் துவங்கும் போது ஏதோ ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என ஆசை கொள்வோம். அப்படிப்பட்ட ஆசை ஒருநாள் நிஜமாகும் போது இந்தியாவுக்காக மிகச் சிறப்பாக விளையாடி நீண்ட நாட்கள் இடம் பிடித்து தொடர்ந்து வெற்றியில் பங்காற்றினால் மட்டுமே 100வது போட்டி உங்களை தேடி வரும்.

இதையும் படிங்க : அபரிவிதமான டேலன்ட் இருக்கு. ஆனாலும் சஞ்சு சாம்சன் கஷ்டப்பட இதுவே காரணம் – சல்மான் பட் ஓபன்டாக்

எனவே அது ஒரு மிகச்சிறந்த உணர்வாகும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்லாது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி ஏராளமான சாதனைகளை செய்து உள்ளார்” என பாராட்டினார்.

Advertisement