
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கை கொடுக்காதது சர்ச்சையை உண்டாக்கியது. அது பற்றி இந்திய அணி நிர்வாகம் மேலே பாகிஸ்தான் ஐசிசியிடம் புகார் செய்தது. அத்துடன் “கை கொடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று போட்டி நடுவர் ஆண்டி ஃபைகிராப்ட் இரு அணி கேப்டன்களிடம் தனிபட்ட முறையில் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
அதனால் அவரை தொடரிலிருந்து நீக்காவிட்டால் தாங்கள் ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறுவோம் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது. அதை விசாரித்த ஐசிசி எந்த விதிமுறைகளையும் மீறாத நடுவர் மற்றும் இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் கடுப்பான பாகிஸ்தான் அமீரகத்துக்கு எதிரானப் போட்டிக்கு முன் நடுவர் தங்களிடம் மன்னிப்பு கேட்டதாக ஒலியற்ற வீடியோவை வெளியிட்டது.
அதனால் தொடர்ந்து ஆசியக் கோப்பையில் விளையாட உள்ளதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. இந்நிலையில் உண்மையில் அமீரகத்துக்கு எதிரானப் போட்டியை ஒரு மணி நேரம் தாமதப்படுத்திய பாகிஸ்தான் தான் விதிமுறையை மீறியதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். எனவே பாகிஸ்தான் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“விதிமுறை புத்தகத்தில் கைகுலுக்க வேண்டும் என்பது கட்டாயமாக இல்லாத நிலையில் பாகிஸ்தானின் புகாரை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. கடந்த காலங்களில் போட்டி முடிந்த பின் இரு அணிகள் கைகுலுக்காத தருணங்கள் ஏராளமாக உள்ளன. அதனாலேயே ஐசிசி பாகிஸ்தானின் புகாரை அமைதியாக புறக்கணித்தது. உண்மையில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் செய்தியாளர்களை சந்திப்பதும் தான் அவசியமான ஒன்றாகும்”
“ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு முன் பாகிஸ்தான் தங்களுடைய கேப்டனை செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க அனுப்பவில்லை. எனவே செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்ததற்காக பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். வாயில் புளிச்சுவையை விட்டுச் செல்லும் மற்றொரு விஷயம் என்னவெனில் போட்டியை ஒரு மணி நேரம் தாமதமாக துவங்குவதாகும்”
“போட்டி நடுவர் ஆண்டி பைஃகிராப்ட் அவர்களுடன் விவாதிக்க பாகிஸ்தானுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை அமீரகத்துக்கு எதிரான போட்டிக்கு முந்தைய 2 நாட்கள் இடைவெளியில் விவாதித்திருக்க வேண்டும். ஆனால் எல்லோரையும் காத்திருக்க வைத்த பாகிஸ்தான் டாஸ் வீசும் நேரம் வரை மைதானத்திற்கு திரும்பாமல் தாமதமாக வந்தனர். போட்டி நடுவர் மன்னிப்பு கேட்க பேரம் பேசுவதால் ஆட்டம் தொடங்குவதை ஒரு மணி நேரம் தாமதப்படுத்தலாம் என்று எந்த விதிமுறை புத்தகத்திலும் இல்லை”
இதையும் படிங்க: 6 ஃபோர்ஸ் 5 சிக்ஸ் 75 ரன்ஸ்.. ஜெயசூர்யாவின் 17 வருட சாதனையை தூளாக்கிய அபிஷேக்.. புதிய வரலாற்று சாதனை
“அது போக பாகிஸ்தான் கேட்டது போல போட்டி நடுவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்று ஐசிசி சொல்கிறது. ஆனால் பாகிஸ்தான் தாங்கள் கேட்ட விஷயம் கிடைத்து விட்டதால் விளையாட ஒப்புக்கொண்டதாக சொல்கிறது. உண்மையில் கைகுலுக்கும் விவகாரத்தில் “தவறான தகவல் தொடர்பு ஏற்பட்டது” என்று மட்டுமே நடுவர் சொன்னதாக தெரிகிறது. ஆனால் அதை மன்னிப்பு கேட்டு விட்டதாக வார்த்தைகளால் சொல்வதற்கு பாகிஸ்தான் துடித்தனர்” என்று கூறினார்.