6 ஃபோர்ஸ் 5 சிக்ஸ் 75 ரன்ஸ்.. ஜெயசூர்யாவின் 17 வருட சாதனையை தூளாக்கிய அபிஷேக்.. புதிய வரலாற்று சாதனை

IND vs BAN
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களது இரண்டாவது சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. செப்டம்பர் 24ஆம் தேதி அபுதாபியில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடினார்.

அவருடன் சேர்ந்து 77 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த சுப்மன் கில் 29 (19) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்து வந்த சிவம் துபே 2 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். ஆனால் இந்தப் பக்கம் பட்டாசாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 25 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். எதிர்புறம் வந்த கேப்டன் சூரியகுமார் தடுமாற்றமாக விளையாடினார்.

- Advertisement -

இந்தியா தடுமாற்றம்:

ஆனாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா 6 பவுண்டரி 5 சிக்சருடன் 75 (37) ரன்கள் எடுத்திருந்த போது சூரியகுமாருடன் ஏற்பட்ட தவறான புரிதலில் ரன் அவுட்டானார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கேப்டன் சூரியகுமாரும் 5 (11) ரன்னில் அவுட்டாகி பின்னாடியே சென்றார். போதாகுறைக்கு திலக் வர்மாவும் 5 ரன்னில் பெவிலியன் திரும்பியதால் இந்திய ரசிகர்கள் கலக்கமடைந்தனர்.

129/5 என இந்தியா தடுமாறிய அந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் விளையாடி 38 (29) ரன்கள் எடுத்தார். அவருடன் அக்சர் படேல் 10* (15) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவரில் இந்தியா 168/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிசாத் ஹுசைன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அபிஷேக் சாதனை:

இந்தப் போட்டியிலும் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் அபிஷேக் ஷர்மா அட்டகாசமாக விளையாடி சதத்தை நெருங்கினார். அப்போது துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தால் அவர் இன்று சதத்தை அடித்திருப்பார் என்றே சொல்லலாம். அதனால் இந்தியா 200 ரன்கள் அடித்திருக்கும் என்றும் சொல்லலாம்.

இதையும் படிங்க: டி20 போட்டிகளில் மோசமான சாதனையில் முதலிடத்திற்கு சென்ற இலங்கை வீரர் தசுன் ஷனகா – விவரம் இதோ

இருப்பினும் இப்போட்டியில் அடித்த 5 சிக்சர்களையும் சேர்த்து நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா 5 போட்டிகளில் 17* சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு ஆசியக் கோப்பையில் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற ஜெயசூர்யாவின் சாதனையை உடைத்துள்ள அபிஷேக் ஷர்மா புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2008 ஆசிய கோப்பையில் இலங்கைக்காக சனாத் ஜெயசூர்யா 14 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனை.

Advertisement