இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக பாகிஸ்தானுடன் 2025 ஆசியக் கோப்பையில் விளையாடியது. துபாயில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாகிஸ்தானை 3 முறை எதிர்கொண்ட இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 8வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இருப்பினும் அந்தக் கோப்பை இதுவரை இந்திய அணியின் கைகளுக்கு கிடைக்காதது சர்ச்சையாக இருந்தது. அதாவது சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடியாக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைகுலுக்காமல் வெளியேறினார்கள்.
இந்தியாவுக்கு கோப்பை வேண்டுமெனில்:
அத்துடன் இறுதிப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி கைகளால் கோப்பையை வாங்க முடியாது என்று இந்தியா அணி தெரிவித்து விட்டது. மறுபுறம் ஆசியக் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் வேறொருவரின் கையில் கோப்பையைக் கொடுத்து இந்தியாவிடம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தம்மை அவமானப்படுத்திய இந்தியாவை பழி வாங்குவதற்காக கையோடு கோப்பையை எடுத்துச் சென்ற அவர் ஆசியக் கவுன்சில் தலைமை அலுவலகத்தில் பத்திரமாக பூட்டி சாவியை தன்னிடம் வைத்துள்ளார்.
அவரிடம் கோப்பையைக் கொடுக்குமாறு பிசிசிஐ பலமுறை கேட்டும் இன்னும் கோப்பை கைக்கு வரவில்லை. இந்நிலையில் இந்தியாவுக்கு கோப்பை வேண்டுமெனில் அவர்களுடைய கேப்டன் சூரியகுமார் யாதவை அழைத்துக் கொண்டு துபாய்க்கு வருமாறு மோசின் நக்வி மீண்டும் தெரிவித்துள்ளார். அங்கே வந்து தம்முடைய கைகளால் இந்தியா கோப்பையை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நக்வி நிபந்தனை:
அத்துடன் கைகுலுக்க விரும்பாத இந்தியாவுடன் தாங்களும் கைகொடுக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கோப்பையை கையாளுவதில் நிலை இருக்கிறது. ஒருவேளை இந்தியா கோப்பையை வாங்க விரும்பினால் அவர்கள் கண்டிப்பாக அவர்களுடைய கேப்டனை துபாய்க்கு அனுப்பி என்னிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு – விவரம் இதோ
“ஒருவேளை இந்தியா அவர்களுடைய வீரர்களை எங்களுடைய வீரர்களுடன் கைகுலுக்க அனுமதிக்காவிட்டால் அது சமமான முறையில் கையாளப்படும். அந்த விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது. அவர்களுடன் நாங்களும் கை குலுக்குவதற்கான ஆர்வத்தைக் கொண்டிருக்கவில்லை. 2015 அண்டர்-19 ஆசியக் கோப்பையில் ஜூனியர் இந்திய வீரர்களின் நடத்தை பற்றி ஐசிசி’க்கு நாங்கள் கடிதம் எழுதுவோம். அத்தொடரின் இறுதிப் போட்டியில் அவர்கள் வெளிப்படுத்திய நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறினார்.



