315 ரன்ஸ்.. மலேசியாவை ஊதித்தள்ளிய இளம் இந்தியா.. 2வது மெகா சாதனை வெற்றியுடன் செமி ஃபைனல்

IND vs ML
- Advertisement -

அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி தங்களது முதல் 2 போட்டிகளில் அமீரகம் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து இந்தியா தங்களது கடைசி லீக் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது. அப்போட்டி டிசம்பர் 16ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துபாயில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற மலேசியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி மலேசியா பவுலர்களை அடித்து நொறுக்கி 50 ஓவரில் 408/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வைபவ் சூரியவன்சி 50, வேதாந்த் திரிவேதி 90, அபிஞ்சான் குண்டு 209* ரன்கள் குவித்தார்கள். குறிப்பாக அண்டர்-19 ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரராக குண்டு சாதனை படைத்தார்.

- Advertisement -

இளம் இந்தியா அசத்தல்:

மேலும் அண்டர்-19 ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார். இதற்கு முன் அம்பத்தி ராயுடு 177 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மறுபுறம் சுமாராக பந்து வீசிய மலேசியாவுக்கு அதிகபட்சமாக முகமது அக்ரம் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்ததாக 409 என்ற இமாலய இலக்கை துரத்திய மலேசியா அணி இந்தியாவின் தரமான பந்து வீச்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32.1 ஓவரில் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹம்சா பங்கி 35 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே 20 ரன்கள் கூட தாண்டவில்லை.

- Advertisement -

சாதனை வெற்றியுடன் ஃசெமி பைனல்:

அதன் காரணமாக 315 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா அண்டர்-19 ஒருநாள் போட்டிகளில் தங்களது 2வது மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2022ஆம் ஆண்டு உகாண்டாவுக்கு எதிராக 326 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். அதற்கு அடுத்தபடியாக அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்களது 2வது பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 16 கோடி குறைத்து அட்டகாசமான வீரரை ஏலத்தில் எடுத்த நடப்பு சாம்பியன் ஆர்.சி.பி – விவரம் இதோ

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீபேஷ் திவ்வேந்திரன் 5, உதவ் மோகன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இதனால் லீக் சுற்றில் 3க்கு 3 வெற்றிகளை பெற்ற இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அல்லது வங்கதேசத்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement