துபாயில் அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் டிசம்பர் 14ஆம் தேதி குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு துவங்கிய அப்போட்டி மழையால் தாமதமானது. அதனால் போட்டி இருதரப்புக்கும் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அந்த சூழ்நிலையில் துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு வைபவ் சூரியவன்சி ஆரம்பத்திலேயே 5 ரன்னில் அவுட்டானதை பாகிஸ்தான் அணி வெறித்தனமாக கொண்டாடியது. இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஆயுஷ் சோப்ரா 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 38 (25) ரன்கள் குவித்து அவுட்டானார்.
பாகிஸ்தானை தெறிக்க விட்ட இந்தியா:
அவருடன் இணைந்து விளையாடிய ஆரோன் ஜார்ஜ் நங்கூரமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். எதிர்ப்புறம் வந்த விகான் மல்கோத்ரா 12, வேதாந்த் திரிவேதி 7, அபிஜான் குண்டி 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஆரோன் ஜார்ஜ் அரை சதமடித்து 12 பவுண்டரி 1 சிக்ஸருடன் 85 (88) ரன்களை குவித்து இந்தியாவுக்கு கைகொடுத்து அவுட்டானார்.
லோயர் ஆர்டரில் கிளன் பட்டேல் 6, ஹெனில் பட்டேல் 12 ரன்களில் அவுட்டானாலும் கனிஷ்க் சௌஹான் அதிரடியாக 2 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (46) ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 240 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக முகமது சாய்ம், அப்துல் சபிக் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
தொடர்ந்து 2வது வெற்றி:
அடுத்து விளையாடிய பாகிஸ்தானுக்கு சமீர் மின்ஹாஸ் 9, அலி ஹசன் 0, அகமது ஹுசைன் 4 என 3 முக்கிய பேட்ஸ்மேன்களை தீபேஷ் திவ்வேந்திரன் தனது வேகத்தால் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக்கி தெறிக்க விட்டார். போதாகுறைக்கு மறுபுறம் திணறிய உஸ்மான் கான் 16 (42) ரன்னில் நடையைக் கட்டினார். அதனால் 30/4 என சரிந்த பாகிஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் ஃபர்கான் யூசுப் 23, ஹம்சா ஜஹூர் 4, அப்துல் சுபன் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள்.
இதையும் படிங்க: உடனே 3வது டி20யில் ராணாவை சேர்த்த கம்பீர்.. ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடதது ஏன்? சூரியகுமார் விளக்கம்
இறுதியில் ஹுசைபா அஹ்சன் தனியாளாக 70 ரன்கள் எடுத்து போராடியும் 41.2 ஓவரில் பாகிஸ்தானை வெறும் 150 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாக்கியது. அதனால் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா தங்களது 2வது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு அதிகபட்சமாக கிசான் குமார் 2, தீபேஸ் திவேந்திரன் 3, கனிஷ்க் சௌஹான் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினர். ஆல் ரவுண்டராக அசத்திய கனிஷ்க் ஆட்டநாயகன் விருதை வென்றார்.



