- Advertisement -
உலக கிரிக்கெட்

இதுக்கு கூட இந்தியா தான் காரணம்ன்னு சொல்வாங்க.. தேவையின்றி விமர்சித்த இங்கிலாந்தை விளாசிய கவாஸ்கர்

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து பரிதாபமாக வெளியேறியது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக 3 – 0 என்ற கணக்கில் அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது. அந்த தொடரின் போது சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடிக்கும் திறமையைக் கொண்டிருப்பதால் அதைப் பற்றி தாங்கள் கவலைப்பட மாட்டோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்தார்.

அப்படிப்பட்ட நிலையில் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 356 ரன்கள் அடித்த இங்கிலாந்து அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தோற்றது. அதே போல கொஞ்சம் சிறிய அணியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 326 ரன்களை அடிக்க முடியாமல் இங்கிலாந்து அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் இங்கிலாந்து வெளியேறியுள்ளது.

- Advertisement -

இந்தியா மீதான விமர்சனம்:

இதற்கிடையே இந்திய அணி பாதுகாப்பு பிரச்சனைகளால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது என்று தெரிவித்து விட்டது. அதனால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது. அங்கே வங்கதேசம், பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. ஆனால் துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடுவதால் இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் ஆகியோர் விமர்சித்தார்கள்.

அதே போல கேப்டன் ஜோஸ் பட்லரும் இந்திய அணிக்கு கொடுக்கப்பட்டுள்ள சாதகம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று வெளியேறியதற்குக் கூட இந்தியா தான் காரணம் என்று இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிப்பார்கள் என சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கவாஸ்கர் விளாசல்:

“இப்போதும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் நாளை மறுநாள் காலை வந்து புலம்பத் துவங்குவார்கள். அவர்கள் தோல்வியை சந்தித்தாலே ஏதாவது சாக்கு வைத்திருப்பார்கள். ஆனால் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை எதிரணி சிறப்பாக இருந்தது என்று அவர்களால் சாக்கு சொல்ல முடியாது. மாறாக எல்லாவற்றையும் குற்றம் சொல்லத் துவங்குவார்கள்”

இதையும் படிங்க: 3க்கு 0.. ஆறுதல் வெற்றியையும் பறித்த மழை.. சொந்த மண்ணில் பாகிஸ்தான் மோசமான உலக சாதனை

“அவர்கள் இந்தியாவை குறை சொல்லத் துவங்குவார்கள். ஏனெனில் இந்தியா அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுகிறது. நாங்கள் ஏன் அவ்வாறு விளையாடவில்லை? என்று சொல்வார்கள்” எனக் கூறினார். அதே நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம். “மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் ஆகிய 2 வர்ணனையாளர்களும் எங்களுடைய நல்ல நண்பர்கள். ஆனால் விமர்சனங்கள் இருந்தால் அது தொடர் துவங்குவதற்கு முன்பாக இருக்க வேண்டுமே தவிர துவங்கிய பின் இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

- Advertisement -