ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கியது. 29 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக தற்போது ஐசிசி தொடர் நடைபெறுகிறது. அது போக சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெறுகிறது. அதை வெற்றிகரமாக நடத்துவதற்காக பாகிஸ்தான் வாரியம் பல கோடி ரூபாய்கள் செலவில் தங்கள் நாட்டில் உள்ள மைதானங்களை புதுப்பித்தது.
அதன் காரணமாக சொந்த மண்ணில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. அடுத்ததாக துபாயில் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் போராடாமலேயே தோல்வியை சந்தித்தது.
பறித்த மழை:
அதனால் ஏமாற்றத்தையும் கோபத்தையும் சந்தித்த அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணியை விமர்சித்தார்கள். ஏனெனில் அடுத்தடுத்த தோல்விகளால் பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைக்கும் வாய்ப்பை கோட்டை விட்டு லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. அந்த நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி ராவல்பிண்டியில் பாகிஸ்தான் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.
அதில் குறைந்தபட்சம் கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான்ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் மதியம் 2 மணிக்கு பிடித்த மழை அந்தப் போட்டியை துவங்க விடாமல் தடுத்தது. அதன் காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் அந்தப் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நடுவர்கள் பாகிஸ்தான் – வங்கதேச அணிகளுக்கு தலா 1 புள்ளிகளை பகிர்ந்து கொடுத்தனர்.
மோசமான உலக சாதனை:
அந்த வகையில் ஆறுதல் வெற்றியை கூட பெறவிடாமல் பாகிஸ்தானுடன் மழை தனது பங்கிற்கு கொஞ்சம் விளையாடியது. அதனால் குரூப் ஏ பிரிவில் 3 போட்டிகளில் 1 வெற்றி கூட பெறாத பாகிஸ்தான் வெறும் 1 புள்ளியுடன் இத்தொடரை நிறைவு செய்தது. சொல்லப்போமால் ரன்ரேட் அடிப்படையில் வங்கதேசம் (-0.443) 3வது இடத்தை பிடித்ததால் பாகிஸ்தான் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. இதன் வாயிலாக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத அணி என்ற மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் சமன் செய்துள்ளது.
இதையும் படிங்க: இறுதிச்சடங்கு முடிந்த கையோடு இந்திய அணிக்காக முழு அர்ப்பணிப்பை காட்டிய மோர்னே மோர்கல் – விவரம் இதோ
இதற்கு முன் 1999 உலகக் கோப்பை, 2000 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களை ஸ்காட்லாந்து மற்றும் கென்யா அணிகள் முறையே இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து நடத்தின. ஆனால் அந்தத் தொடர்களில் அவ்விரு அணிகளும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. தற்போது அந்த மோசமான பரிதாபமான சாதனையை பாகிஸ்தான் சமன் செய்தது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



