விராட் கோலி 50வது சதத்தை அங்க தான் அடிப்பாரு.. தேதியுடன் தில்லான கணிப்பை வெளியிட்ட கவாஸ்கர்

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியிலேயே வலுவான ஆஸ்திரேலியாவை போராடி வீழ்த்திய இந்தியா பரம எதிரி பாகிஸ்தானை தொடர்ந்து 8வது முறையாக உலகக்கோப்பையில் தோற்கடித்து தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்தது.

அதை தொடர்ந்து மிகவும் வலுவான நியூசிலாந்தை ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக தோற்கடித்த இந்தியா ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தையும் எளிதாக வீழ்த்தியது. இந்த வெற்றிகளில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோகத் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்களாக பொறுப்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

கவாஸ்கரின் கணிப்பு:
குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சவால் மிகுந்த போட்டிகளில் 85, 95 ரன்கள் எடுத்த விராட் கோலி தன்னை சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 ரன்னில் சதத்தை தவறவிட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் (49) உலக சாதனையை சமன் செய்யும் வாய்ப்பையும் தவற விட்டது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 48 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி அடுத்த 2 போட்டிகளுக்குள் 49வது சதத்தை அடித்து வரும் நவம்பர் 5ஆம் தேதி தம்முடைய பிறந்தநாளில் கொல்கத்தா ஈட்ன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 50வது சதத்தை அடிப்பார் என்று சுனில் காவாஸ்கர் அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி தன்னுடைய 50வது ஒருநாள் சதத்தை அடிப்பார். அதை அன்று அவர் தம்முடைய பிறந்தநாளில் அடிப்பதை விட வேறு என்ன ஸ்பெஷல் இருக்க முடியும்? கொல்கத்தாவில் நடைபெறும் அந்தப் போட்டிக்கு முன்பாக விளையாடும் 2 போட்டிகளில் அவர் 49வது சதத்தை அடிப்பார். மேலும் ஈடன் கார்டன்ஸ் எப்போதுமே பெரிய ரன்கள் அடிக்கக்கூடிய மைதானமாகவும் அதிக ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் அரங்கமாகவும் இருந்து வருகிறது”

இதையும் படிங்க: பதிரானாவுக்கு பதிலாக 36 வயது ஓரங்கட்டப்பட்ட வீரரை அணியில் தேர்வு செய்த இலங்கை – மட்டமான செலெக்ஷன்

“எனவே அங்கே நீங்கள் சதமடித்தால் கொல்கத்தா ரசிகர்கள் உங்களுக்கு எழுந்து நின்று கைதட்டி விசிலடித்து பாராட்டிக் கொண்டாடுவார்கள். அது போன்ற தருணம் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் மறக்க முடியாத ஒன்றாக அமையும்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறினார். இந்த சூழ்நிலையில் அந்த போட்டிக்கு முன்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளை இந்தியா எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement