இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள வேளையில் நான்காவது போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 152 ரன்கள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் கையே இந்த போட்டியில் ஓங்கியுள்ளது.
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணியானது அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட்டின் சிறப்பான சதம் காரணமாக 353 ரன்களை குவித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது ஒரு கட்டத்தில் 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் காரணமாக இந்திய அணி 250 ரன்களை கூட எடுக்காது என்றே பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் பின்வரிசை பந்துவீச்சாளர்களுடன் கைகோர்த்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரேல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 149 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 90 ரன்கள் அடித்து இந்திய அணியை 307 ரன்கள் பெறவைத்து கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார்.
சவாலான இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களை ஒருபுறம் நிற்க வைத்து நேர்த்தியாக விளையாடிய அவரது ஆட்டத்திற்கு பலரது மத்தியிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : துருவ் ஜுரேலின் திடமான மனநிலையை பார்க்கும் போது அவர்தான் அடுத்த எம்.எஸ் தோனியாக இருக்கப் போகிறார் என்று நினைக்கிறேன். இன்றைய போட்டியில் அவர் சதத்தை தவற விட்டிருந்தாலும் நிச்சயம் இனி வரும் போட்டிகளில் பல சதங்களை அவர் அடிக்கப்போகிறார் என்பதில் சந்தேகம் இல்லை என்று பாராட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க : நீ என்ன ஹீரோவா? கவனக்குறைவால் தவறினை செய்த சர்பராஸ் கான்.. செல்லமாக அதட்டிய ரோஹித் – நடந்தது என்ன?
இந்திய அணியை பொறுத்தவரை ரிஷப் பண்டினை தவிர்த்து எந்த ஒரு பேட்ஸ்மேனும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத வேளையில் சூழலை கணித்து எவ்வாறு பின்வரிசை வீரர்களை வைத்து விளையாட வேண்டும் என்பதை வெளிக்காட்டிய துருவ் ஜுரேலின் இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.