
தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அனில் கும்ப்ளேவுக்குப் பின் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ள அவர் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். 38 வயதாகும் அவர் நிறைய சாதனைகளை படைத்து இந்தியாவின் பல வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.
அப்படிப்பட்ட அவர் திடீரென ஓய்வு பெற்றது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் கொஞ்சம் சோகமாகவும் அமைந்தது. இந்நிலையில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவமானப்படுத்தி வந்ததாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனாலேயே அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம் என்று கவாஸ்கர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்த அக்டோபர் வரை இந்தியா சொந்த மண்ணில் எந்த டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை. அதற்கு முன்பாக இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தியாவுக்காக ஒரு அற்புத வீரராக செயல்பட்டு வந்த அஸ்வின் வெளிநாடுகளில் விளையாடிய போது நமக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கருதியுள்ளார்”
“நீங்கள் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா செல்லும் போது அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த வகையில் அடுத்த இங்கிலாந்து தொடரிலும் நமக்கு வாய்ப்பு கிடைக்காது என்று அஸ்வின் நினைத்திருக்கலாம். அதனாலேயே அவர் தனது ஓய்வை அறிவித்திருக்கலாம். அனில் கும்ப்ளேவின் சாதனையை உடைப்பதற்காக அஸ்வின் நினைத்திருந்தால் விளையாடியிருக்கலாம்”
“நீங்கள் சதம் அடிக்கலாம். 5 விக்கெட், 10 விக்கெட்டுகள் எடுக்கலாம். ஆனால் அதை செய்வதற்கு மனதளவில் தயாராக இருக்க வேண்டும். அடிலெய்ட் நகரில் நடைபெற்ற 2வது போட்டியிலேயே அஸ்வின் இந்தியாவுக்காக விளையாடும் மனநிலையில் இல்லை. ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி விளையாட வைத்ததாக ரோகித் சர்மா கூறியிருந்தார். அதிலிருந்து அனில் கும்ப்ளேவை முந்தி நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் எண்ணம் அஸ்வினிடம் இல்லை என்பது தெரிகிறது”
இதையும் படிங்க: நாங்களே எதிர்பாக்கல.. அஸ்வின் திடீர்னு ஓய்வு பெற இந்த அவமானமே காரணம்.. அப்பா ஆதங்க பேட்டி
“ஏற்கனவே 500, 530, 540 விக்கெட்டுகள் எடுத்த ஒருவர் தன்னுடைய செயல்பாடுகள் மீது பெருமையுடன் இருப்பார். இருப்பினும் இதற்கு முன் நீங்கள் போதுமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் வெளிநாடுகளில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அது உங்களுக்கு வலிக்கும். கண்டிப்பாக அது உங்களுக்கு வலிக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக வெளிநாடுகளில் செட்டாக மாட்டார் என்று கருதி அஸ்வினுக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.