- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி மாதிரி இப்படி பண்ணலாமா.. அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடீங்க.. அஸ்வின் ஓய்வு பற்றி கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதனுடைய முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கடித்து தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் காபாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டி மழையால் டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியுடன் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2010 – 2014 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் 765 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். மேலும் முத்தையா முரளிதரனுக்கு சமமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரராகவும் அஸ்வின் வரலாறு படைத்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:

2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வின்னரான அவர் 38 வயதை கடந்துள்ளதால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் 2014 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இதே போல 3வது போட்டியின் முடிவில் ஓய்வு பெற்ற தோனி போல அஸ்வின் விடை பெற்றுள்ளதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது இந்திய வீரர்களிடம் உணர்வுபூர்வமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

அதன் காரணமாக இந்திய அணியில் ஒரு வீரர் குறைந்துள்ளதாகவும் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடர் முடிந்த பின் இந்திய அணிக்காக விளையாட இருக்க மாட்டேன் என்று அஸ்வின் சொல்லியிருக்கலாம். ஆனால் 2014 – 15 ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டியில் தோனி செய்ததை போலவே அவரும் செய்துள்ளார்”

- Advertisement -

தோனி போல:

“அது உங்களுக்கு ஒரு வீரரை குறைக்கும். தேர்வாளர்கள் காரணங்களை வைத்து பல்வேறு வீரர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏதேனும் ஒரு வீரர் காயமடைந்தால் மற்ற வீரர் விளையாட வேண்டும். குறிப்பாக சிட்னி மைதானம் ஸ்பின்னர்களுக்கு நிறைய உதவி செய்யும். எனவே இந்தியா அங்கே 2 ஸ்பின்னர்களுடன் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க: ஓய்வை அறிவித்த இந்திய வீரர் அஷ்வினுக்கு மறக்கமுடியாத நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்த – பேட் கம்மின்ஸ்

“அதனால் அந்தப் போட்டியில் அஸ்வின் விளையாடக்கூடும். ஆனால் அவர் வாய்ப்பை தற்போது தவற விட்டுள்ளார். பொதுவாக நீங்கள் இது போன்ற முடிவை தொடரின் இறுதியில் அறிவிக்க வேண்டும். பாதியில் அறிவிப்பது சரியானதல்ல. அஸ்வின் நாளை வீடு திரும்புவதாக ரோஹித் சொன்னார். எனவே சர்வதேச வீரராக அஸ்வினின் வாழ்க்கை முடிந்துள்ளது. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடலாம் என்று கூறினார்.

- Advertisement -