
ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் துணைக் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
அதனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதே போல பேக்-அப் கீப்பராக தேர்வாகியிருந்த ஜிதேஷ் சர்மா கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு இசான் கிசான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2025 சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் கேப்டனாக ஃபைனலில் சதமடித்து ஜார்க்கண்ட் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.
அதனால் அவரை பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்துள்ள தேர்வுக்குழு ஜிதேஷ் சர்மாவை கழற்றி விட்டு ஃபினிஷராக அறியப்படும் ரிங்கு சிங்கை லோயர் ஆர்டரில் விளையாடத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் டிஆர்எஸ் எடுப்பதில் தோனி போல கேப்டனுக்கு உதவிகளைச் செய்யக்கூடிய ஜிதேஷ் சர்மாவை காரணமின்றி நீக்கியது ஏமாற்றமளிப்பதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஐபிஎல் தொடரை மட்டும் வைத்து வீரர்களை தேர்ந்தெடுக்காமல் உள்ளூர் தொடரான சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் அசத்திய இசான் கிசானை தேர்ந்தெடுத்ததற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி சுனில் கவாஸ்கர் தெரிவித்தது பின்வருமாறு. “ஜிதேஷ் சர்மாவை நீக்கியது கடினமான முடிவு என்று கருதுகிறேன். தனது வாய்ப்பில் நல்ல விக்கெட் கீப்பராக செயல்பட்ட அவர் தோனிக்கு பின் டிஆர்எஸ் முடிவுகளை எடுப்பதில் கேப்டனுக்கு சிறந்த வகையில் உதவக்கூடியவராக திகழ்கிறார்”
“எனவே அவர் மேலே கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இளமையாக இருக்கும் அவர் மறுவாய்ப்புக்காக உள்ளூருக்கு சென்று தொடர்ந்து விளையாட வேண்டும். இஷான் கிசான் ஏற்கனவே இந்திய அணியில் இருந்தார். தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ள அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கூடுதல் பலமாகும்”
இதையும் படிங்க: இதுல ராக்கெட் சைன்ஸ் ஒன்னுமில்ல.. காயம் என்ற பெயரில் சாம்சனை கொண்டு வந்துட்டாங்க.. அஸ்வின் ஓப்பன்டாக்
“சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் நல்ல ஃபார்மில் விளையாடிய காரணத்தால் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடைய தேர்வு இந்தியாவுக்காக விளையாட வேண்டுமெனில் ஐபிஎல் மட்டுமின்றி, உள்ளூரில் வெளிப்படுத்தும் ஆட்டம் முக்கிய அளவுகோலாக இருக்க வேண்டும் என்பதை நிரூபித்துள்ளது. அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சில வருடங்களாக வெளியே இருந்த அவர் தன்னுடைய மாநில அணியான ஜார்க்கண்டுக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்ததால் கம்பேக் கொடுத்துள்ளார்” என்று கூறினார்.