ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் துணை கேப்டனாக விளையாடி வந்த சுப்மன் கில் கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் ஆகியோர் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடி நிலையான இடத்தைப் பிடித்தார்கள்.
ஆனால் திடீரென சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைத்த தேர்வுக்குழு டி20 அணியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்து ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தது. அந்த வாய்ப்பில் தடுமாற்றமாக விளையாடிய கில் கடைசி 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறினார். இருப்பினும் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது.
காயம் என்ற பெயரில்:
அதன் காரணமாக டி20 உலகக் கோப்பையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் காலில் சந்தித்த காயத்தால் விலகிய அவருக்கு பதிலாக சாம்சன் விளையாடினார். அந்த வாய்ப்பில் கடைசிப் போட்டியில் 168 ஸ்ட்ரைக் ரைட்டில் அசத்திய சாம்சன் தம்மால் கில்லை விட ஓப்பனிங்கில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார்.
அதனால் கடைசி நேரத்தில் தைரியமாக கில்லை கழற்றி விட்ட தேர்வுக்குழு சாம்சனை தேர்ந்தெடுத்தது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் சுப்மன் கில்லை காயம் என்ற பெயரில் கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு 2026 டி20 உலகக் கோப்பையில் சாம்சனை தேர்ந்தெடுத்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 15 வருடங்களாக இந்தியாவுக்காக விளையாடிய தாம் பலமுறை இப்படிப்பட்ட தேர்வுகளை நேரில் பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அஸ்வின் வெளிப்படை:
இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சாம்சனின் இன்னிங்ஸ் தான் அவருடைய தேர்வுக்கு காரணம் என்று சொல்வது பொருத்தமற்றது. அந்த ஃபார்முலாவும் காம்பினேசனும் மாறும் என்று நான் கணித்திருந்தேன். எனவே எனக்கு அந்த முடிவு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் அனைத்து விஷயங்களும் அதை நோக்கி தான் சென்றன”
இதையும் படிங்க: ரிஷப் பண்ட் தலைமையில் விளையாட இருக்கும் விராட் கோலி.. கடைசியா அவரையும் – டொமஸ்டிக் மேட்ச் ஆடவச்சிட்டாங்க
“சுப்மன் கில் கடைசி நேரத்தில் காயமடைத்துள்ளார் என்று சொன்ன போதே சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் விளையாடப் போகிறார் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. இதன் பின்னணியில் எந்த ராக்கெட் அறிவியலும் கிடையாது. இந்திய கிரிக்கெட்டில் 15 வருடங்களாக விளையாடியுள்ள நான் இது போன்ற நிறைய கடைசி நேர மாற்றங்களைப் பார்த்துள்ளேன்” என்று கூறினார்.



